அம்மணி அம்மாள் மடத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய பாஜக பிரமுகர் சங்கரை திருப்பதியில் போலீசார் கைது செய்தனர். நீதிபதி உத்தரவின் பேரில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோபுரத்தை கட்டிய அம்மணி அம்மாள் அந்த கோபுரத்தின் எதிரே மடம் அமைத்திருந்தார். 17ம் நூற்றாண்டில் அவர் ஜீவ சமாதி அடைந்தார். இந்த மடத்தை இந்து முன்னணி மாவட்ட தலைவராக இருந்த வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் (தற்போது பாஜகவில் உள்ளார்) டிரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி தன் வசப்படுத்தி வைத்திருந்தார்.
இது சம்மந்தமான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் பக்கம் தீர்ப்பு வந்ததை தொடர்ந்து சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 23 ஆயிரத்து 800 சதுரடி இடத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்து சமய அறநிலையத்துறை மீட்டது. அப்போது அம்மணி அம்மாள் வாழ்ந்த வந்த மடமும் சேர்த்து இடிக்கப்பட்டதால் பக்தர்கள் கொதிப்படைந்தனர்.
இந்நிலையில் அந்த மடத்தின் மீது ஏறி பாஜக பிரமுகர் டி.எஸ்.சங்கர் போராட்டம் நடத்தினார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்தார். இதை சொல்வதால் என்னை கைது செய்தாலும் பரவாயில்லை என்றும் கூறினார். அப்போது போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் கூடி அவர் பேசுவதை கேட்டனர். மேலும் அவர் பேசியது பேஸ்புக்கில் லைவ்வாக வெளியாகியது.
இதையடுத்து மடத்தில் அத்துமீறி நுழைந்ததாக சங்கர் மீது திருவண்ணாமலை நகர போலீசில் கோயில் இணை ஆணையர் புகார் கொடுத்தார். அந்த புகாரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனிமலையைச் சேர்ந்த ஏழுமலை, காளியப்பன், கார்த்திகேயன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். சங்கர் உள்பட 3 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று போலீசார், சங்கரை திருப்பதியில் கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.
இன்று இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு சங்கரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு போலீசார் ஆஜர் படுத்தினார். அவரது உத்தரவின் பேரில் 14 நாள் ஜெயிலில் சங்கர் அடைக்கப்பட்டார்.