கலசபாக்கம் அருகே கார் மீது லாரி மோதியதில் முன்னாள் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் இறந்தனர்.
திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் பாபு என்கிற ரவிக்குமார் (வயது 45). தந்தை பெயர் தண்டபாணி. ரவிக்குமார், கலசப்பாக்கத்தில் உள்ள பல்லவன் கிராம வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வேலையிலிருந்து நின்று விட்டார். இவருக்கு திருமணமாகி மீரா என்ற மனைவி உள்ளார்.
ரவிக்குமார். திருவண்ணாமலையில் நடைபெற்ற தனது உறவினரின் திருமணத்திற்கு சென்று விட்டு நேற்று இரவு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அந்த காரை மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் ஏழுமலை ஓட்டிச் சென்றார். காரில் ரவிக்குமாருடன், கலசப்பாக்கத்தைச் சேர்ந்த வீரமணி(50) என்பவரும் பயணித்தார்.
நள்ளிரவு 12.40 மணி அளவில் கார், தென்பள்ளிப்பட்டு பச்சையம்மன் வாட்டர் சர்வீஸ் அருகில் வந்த போது வேகமாக வந்த லாரி கார் மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் பாபு என்கிற ரவிக்குமார் அதே இடத்தில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் இறந்தார்.
படுகாயம் அடைந்த டிரைவர் ஏழுமலை, வீரமணி ஆகியோர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு ஏழுமலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததும் கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முனுசாமியை (39) கைது செய்தனர்.