திருவண்ணாமலை அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டது. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். விவசாயி.
இவரது மகன் சக்திவேல் (வயது 15). சக்திவேலுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் காரில் அவரை அழைத்துக் கொண்டு அவரது குடும்பத்தினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
காரை சாத்தனூரைச் சேர்ந்த இளையராஜா(28) என்பவர் ஓட்டிச் சென்றார். காரில் சக்திவேலின் தந்தை செல்வம், தாய் காமாட்சி, சகோதரர் சஞ்சய் ஆகியோர் இருந்தனர்.
நேற்று இரவு 11 45 மணி அளவில் திருவண்ணாமலை அடுத்த பெரிய கோலாப்பாடி இந்திரா நகர் அருகே சென்ற போது எதிரே கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு காலி பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் கார் பலத்த சேதமடைந்தது. காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் இருந்த சக்திவேல், அவரது தாயார் காமாட்சி (40), டிரைவர் இளையராஜா (28) ஆகிய 3 பேரும் அதே இடத்தில் தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்தனர். சக்திவேலின் தந்தை செல்வம் காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சஞ்சய் காயமின்றி தப்பினார்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சாவூர் மாவட்டம் மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் அய்யப்பனை(42) கைது செய்தனர்.
ஓரே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்தது சாத்தனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.