திருவண்ணாமலை அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கற்பூரம் ஏற்றி ஒப்பாரி வைத்தும், நெஞ்சில் அடித்துக் கொண்டும் மண்ணை வாரி இறைத்து சாபம் விட்டனர்.
மடம் ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோபுரத்தை கட்டிய அம்மணி அம்மாள் அந்த கோபுரத்தின் எதிரே மடம் அமைத்து ஆன்மீக பணிகளை செய்து வந்தார். 17ம் நூற்றாண்டில் அவர் ஜீவ சமாதி அடைந்தார். பிறகு ஆக்கிரமிப்பின் பிடியில் அந்த மடம் சிக்கியது.
இது சம்மந்தமான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் பக்கம் தீர்ப்பு வந்ததை தொடர்ந்து சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 23 ஆயிரத்து 800 சதுரடி இடத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டது. அப்போது அம்மணி அம்மாள் வாழ்ந்த வந்த மடமும் சேர்த்து இடிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்து அமைப்பினர் அங்கு சென்று இடிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
ஜேசிபி சிறை பிடிப்பு
இந்நிலையில் இன்று காலை மடத்தின் பக்க வாட்டு பகுதிகள் இடிக்கும் பணி துவக்கியது. அப்போது அங்கு சென்ற இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.அருண்குமார், நகரத் தலைவர் என்.செந்தில் மற்றும் நிர்வாகிகள் ஜே.சி.பியை சிறை பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் வேலையை நிறுத்தும் படி கூறி போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அம்மணி அம்மன் கோபுரத்திற்கு செல்லும் பாதையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.அருண்குமார் தலைமை தாங்கினார். கோட்ட அமைப்பாளர் ரமேஷ், வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோட்ட தலைவர் கோ.மகேஷ் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,
பெண் துறவி
உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு வடக்கு கோபுரம் அமைத்துக் கொடுத்த பெண் துறவி அம்மணி அம்மாள். இம்மண்ணில் எண்ணற்ற சித்தர்கள், ஞானிகள், துறவிகள் வாழ்ந்திருக்கின்றனர். அதில் ஒருவர் தான் பெண் துறவி அம்மணி அம்மாள்.
அம்மணி அம்மாள் மடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றியத போது சந்தோஷப்பட்டது இந்து முன்னணி. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நாங்களும் உறுதுணையாக இருந்தோம். ஆக்கிரமிப்பை எடுத்ததற்காக இந்து சமய அறநிலைத்துறையையும், காவல்துறையையும் பாராட்டுகிறேன்.
மடத்தை இடிக்க சொன்னது யார்?
ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் மடத்தை இடித்து தள்ளியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை எடுக்கச் சொல்லி தான் நீதிமன்றம் கூறியுள்ளது. மடத்தை இடிக்க சொல்லி ஆணை வழங்கியது யார்? பக்தர்கள் போடும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயில் சம்பளம் வாங்கும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் யாரும் நான் போன் செய்தபோது எடுக்கவில்லை. அதன் பிறகு இங்கு இருக்கிற பொறுப்பாளர்கள் சென்று மடத்தை இடிக்கும் பணியை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
இங்கு இருக்கிற இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி ஜோதிலட்சுமியை என்ன வார்த்தை சொல்லி திட்டுவது? தெய்வமாக வணங்கக் கூடிய ஒரு பெண் துறவி கட்டிய மடத்தை ஒரு பெண் அதிகாரி இடிப்பது நியாயமா? மீண்டும் தொடர்பு கொண்டபோது ஜோதிலட்சுமி போனை எடுத்தார் உள்ளே மண்டபம் இருப்பது எனக்கு தெரியாது என்று பதில் அளித்தார். அவர் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. மண்டபம் இருப்பது தெரியாமல் ஒரு அதிகாரி இங்கு வேலை செய்வதா?
இடிப்பதற்கு அதிகாரம் இல்லை
அந்த மண்டபம் இடிந்து விழும் தருவாயில் இருப்பதால் இடிக்கப்பட்டது என்று கூறுகிறார். இதற்கு உத்தரவு கொடுத்தது யார்? இடிப்பதற்கு முன்பு 9 துறைகளிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? இணை ஆணையருக்கு இடிப்பதற்கு அதிகாரம் இல்லை. கோயிலை பாதுகாக்கவும், கோயிலில் பூஜை செய்யவும், கோயிலை நிர்வாகம் செய்வதற்கு மட்டுமே இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.
அம்மணி அம்மன் படம் இடிக்கப்பட்டதற்கு எந்த எதிர்க்கட்சியும் குரல் கொடுக்கவில்லை. அதிமுகவின் மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் வந்து பார்வையிடவில்லை. காரணம் அமைச்சரை எதிர்த்தால் தொழிலை முடக்கி விடுவார் என்பதற்காக தான். மடத்தை இடித்த இணை ஆணையர் ஜோதிலட்சுமி, தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் இந்து முன்னணி அவரது பதவியை பறிக்கும்.
முதலமைச்சருக்கு கடிதம்
அண்ணாமலையார் மீது விசுவாசமாக இருந்தால் மடத்தை பழமை மாறாமல் கட்டமைக்க வேண்டும். இது பசி தீர்த்த மடம், நோய் தீர்த்த மடம். எவ்வளவு அற்புதங்கள் நிகழ்ந்த இடம். தெய்வீகம் தாய் உருவாக்கிய மடம். தீபத் திருவிழாவுக்கு கள்ளச் சந்தையில் டிக்கெட்டை விற்பனை செய்த திமுகவினரை அப்போதே எதிர்த்திருந்தால் இந்த மாதிரி எல்லாம் நடந்து இருக்குமா?
இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்கள் அத்தனை பேரும் திருவண்ணாமலைக்கு வந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளனர். இங்கு இருக்கிற இந்துக்கள், மடம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்ப கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை நகர பொதுச் செயலாளர் மஞ்சுநாதன் மற்றும் மாவட்ட நகர வட்டார நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர தலைவர் என்.செந்தில் நன்றி கூறினார்.
பிறகு இடிக்கப்பட்ட இடத்திற்கு சென்று கற்பூரம் ஏற்றி ஒப்பாரி வைத்தும், நெஞ்சில் அடித்துக் கொண்டும் மண்ணை வாரி இறைத்து சாபம் விட்டனர்.
வீடியோவை காண…
https://www.facebook.com/100010512168519/videos/933170887689421/
கோட்ட தலைவர் கோ.மகேஷ்-உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமி உரையாடல்