திருவண்ணாமலையில் அம்மணி அம்மாள் மடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை, மடத்தையும் சேர்த்து இடித்ததால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்புகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மடத்தை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம்(அம்மணி அம்மன்) பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி அந்த கோபுரத்தினைக் கட்டி முடித்தவர் பெண் சித்தரான அம்மணி அம்மாள். 17ம் நூற்றாண்டு இறுதியில் அவர் ஜீவ சமாதி அடைந்தார். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது.
அம்மணி அம்மாள் கட்டியதால் அம்மணி அம்மன் கோபுரம் என அழைக்கப்பட்டு வரும் வடக்கு கோபுரம் எதிரில் அவர் வாழ்ந்த மடம் உள்ளது. அவரது மறைவிற்கு பிறகு இந்த மடம் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த மடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி 1978ம் ஆண்டு முதன்முதலாக விசுவ இந்து பரிஷத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. பிறகு 2015ல் வழக்கறிஞர் கே.ஆர்.குமார்(தற்போது பாஜக வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவராக உள்ளார்) வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் மடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியிருந்த வழக்கறிஞர் சங்கர்(பாஜக நிர்வாகி) கோர்ட்டில் தொடர்ந்திருந்த வழக்கில் பெறப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அதிரடியாக களம் இறங்கிய இந்து சமய அறநிலையத்துறை இன்று 23ஆயிரத்து 800 சதுர அடி ஆக்கிரமிப்புகளை அகற்றியது. இதன் மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று மாலை வரை நீடித்தது. அப்போது அம்மணி அம்மாள் வாழ்ந்த மடத்தையும் அதிகாரிகள் இடிக்க தொடங்கினர். தகவல் கிடைத்ததும் விசுவ இந்து பரிஷத் பூசாரிகள் அமைப்பின் மாநில செயலாளர் அம்மணி அம்மன் ரமேஷ், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.அருண்குமார், நகர தலைவர் என்.செந்தில், விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஏழுமலை மற்றும் இந்து அமைப்பினர் அங்குச் சென்று மடத்தை இடிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
ஆக்கிரமிப்புகளை மட்டுமே இடிக்க வேண்டும் என உத்தரவில் உள்ள போது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்மணி அம்மாள் உருவாக்கிய மடத்தை எப்படி இடிக்கலாம்? என அதிகாரிகளுடன் கேட்டனர். அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பழைய கட்டிடம் என்பதால் இடித்தோம் என கூறியதால் ஆத்திரம் அடைந்த இந்து அமைப்பினர், புராதான கட்டிடத்தை பாதுகாக்காமல் இடித்து விட்டு அலட்சியமாக பதிலளிப்பதா? என கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அம்மணி அம்மாள் உருவாக்கிய மடத்தை இடித்த அதிகாரிகளை கண்டித்து நாளை காலை 10-30 மணி அளவில் இடிக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.