திருவண்ணாமலை அருகே மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கமர்சியல் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை வட்டம், கொளக்கரவாடி அஞ்சல், சீலப்பந்தல் மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம், இவர் தனது மகன் கார்த்தியின் மெத்தை வீட்டிற்கு மின்சார இணைப்பு கேட்பதற்காக 21-3-2023 அன்று மல்லவாடியில் உள்ள மின்சார வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த கமர்சியல் இன்ஸ்பெக்டர் தேவி, மின் இணைப்பு கொடுக்க ரூ.15 ஆயிரம் தர வேண்டும் என்றும், கையூட்டு கொடுத்தால் ஆன்லைன் வேலைகள் உள்பட அனைத்து வேலைகளையும் தானே பார்த்து கொள்வதாகவும், இந்த பணத்தை உயரதிகாரிகளுக்கு தர வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத வெங்கடாஜலம், இது குறித்து இன்று திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து மின்சார வாரிய கமர்சியல் இன்ஸ்பெக்டர் தேவி என்பவரை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை வெங்கடாசலத்திடம் கொடுத்து அனுப்பி அவரை பின் தொடர்ந்தனர். மல்லவாடி இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் இருந்த கமர்சியல் இன்ஸ்பெக்டர் தேவியிடம், வெங்கடாசலம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தேவியை கையுங்களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தேவியை போலீசார், திருவண்ணாமலை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். தேவியை 15 நாள் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய போர்மேன் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பெண் அலுவலர் சிக்கியிருப்பது மின்சார துறையில் கைநீட்டும் அலுவலர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.