Homeசெய்திகள்ஹைவே-பிடபிள்யூடி சொத்தை வைத்து நாட்டுக்கு கடன்

ஹைவே-பிடபிள்யூடி சொத்தை வைத்து நாட்டுக்கு கடன்

நமது நாட்டுக்கு கடன் வாங்க வேண்டும் என்ற நிலை வந்தால் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை சொத்தை வைத்து தான் வாங்க வேண்டும் என ஆரணி-எட்டிவாடி நான்கு வழிப்பாதை பணிகளை துவக்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

ரூ.130 கோடியில் சாலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வடமாதிமங்கலம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் ஆரணி-எட்டிவாடி சாலை ரூ.130 கோடி மதிப்பீட்டில் 15.5கி.மீ. தூரம் இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.

இதன் துவக்க விழா இன்று காலை வடமாதிமங்கலத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேல் அனைவரையும் வரவேற்றார். சென்னை தலைமை பொறியாளர் அ.சந்திரசேகரன் விளக்கவுரையாற்றினார்

இந்த விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு ஆரணி- எட்டிவாடி நான்கு வழிபாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் அவர் பேசியதாவது,

பெரும்பாலும் நான்கு வழி சாலையை பணியை ஒன்றிய அரசுதான் செய்யும். மாநில அரசு இதை மேற்கொள்வதில்லை. எட்டு வழி சாலையாக இருந்தாலும் அது ஒன்றிய அரசு தான். நெடுஞ்சாலை துறை ஆணையம் மூலமாக இந்த சாலைகள் அமைக்கப்படும். மாநில சாலைகள் என்பது மூன்று மீட்டர், ஐந்தரை மீட்டர், ஏழரை மீட்டர், அதிகப்படியாக பத்து மீட்டர் இப்படித்தான் இருக்கும்.

சாலை அத்தியாவசியமானது

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் தான் ஏழ்மை, வறுமை ஒழியும். இதற்கு அத்தியாவசியமானது சாலை மேம்பாடு. சாலை இல்லாமல் யாரும் போக முடியாது. விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் வர வேண்டும் என்றாலும் சாலைகள் தேவை. உற்பத்தி செய்யக்கூடிய எந்த பொருளாக இருந்தாலும் அது வெளி மாநிலத்திற்கு செல்ல சாலை தேவைப்படுகிறது. வெளிநாட்டிற்கும் போக வேண்டும் என்றால் கப்பலுக்கு கொண்டு செல்ல சாலை தேவை. எனவே சாலை என்பது அத்தியாவசியமானது.

சென்ற அரசாங்கம் 6 லட்சத்து 68 ஆயிரம் கோடி கடனை வைத்து விட்டு சென்றுள்ளது. கடனை எப்படி வாங்குகிறோம்? தனி மனிதன் கடன் வாங்கும் போது பாண்டு, பத்திரம், சொத்து வைத்து கடன் வாங்க வேண்டியது உள்ளது. அரசு கடன் பெற வேண்டும் என்றால் அரசுக்கும் சொத்து தேவை..

See also  கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்- எஸ்.பி

கடன் பெற மூலதனம் தேவை

அரசாங்கம் என்றவுடனே உலக வங்கியோ, ஜப்பான் வங்கியோ கடன் கொடுத்து விடாது. அரசாங்கம் கடன் பெற வேண்டும் என்றால் அந்த அரசுக்கு மூலதனம் தேவை. மூலதனத்தை உருவாக்கினால் தான் அரசாங்கமே கடன் வாங்க முடியும். நமது நாட்டுக்கு நாம் கடன் வாங்க வேண்டும் என்ற நிலை வந்தால் நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை சொத்தை வைத்து தான் வாங்க வேண்டும், எனவே அதிகாரிகள் முனைப்போடு செயல்பட வேண்டுமென முதல்வர் நினைக்கிறார்.

ஒரு பக்கம் பொருளாதாரத்தை ஈட்டுவது நெடுஞ்சாலைத்துறை, ஒரு பக்கத்தில் அரசுக்கு சொத்து சேர்த்து வைப்பது நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை. சாலையை விரிவுபடுத்தும் போது பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அரசாங்கம் சொத்தையும் சேர்க்க முடியும். இரண்டு திட்டத்தின் அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சென்ற வருடம் முதல் தமிழ்நாட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது சென்ற ஆண்டு 32 பணிகளும், இந்த ஆண்டு 23 பணிகள் எடுத்துள்ளோம்.

10 ஆண்டு காலத்தில் 2 ஆயிரத்து 200 கிலோமீட்டர் சாலைகளை, முதலமைச்சரின் சாலை மேம்பாடு திட்டத்தில் எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் அந்த அடிப்படையில் தான் திருவண்ணாமலையிலிருந்து தர்மபுரி, திருக்கோவிலூர், ராணிப்பேட்டை, செய்யாறு ஆகிய ஊர்களை இணைக்கிற வகையில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

ஹைவே-பிடபிள்யூ சொத்தை வைத்து நாட்டுக்கு கடன்

ஆரணி-ஆற்காடு சாலை விரிவாக்கம்

ஆரணியிலிருந்து ஆற்காடு செல்லும் சாலை விரிவாக்கப் பணியை அடுத்த ஆண்டில் மேற்கொள்ள ஆலோசித்துள்ளோம்.

எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள். வரவேற்பு என்ற பெயரில் எனது சட்டையை கிழித்து விட்டார்கள். எனது உடல் முழுவதும் மஞ்சளாக உள்ளது. இதை ஆர்வமாக எடுத்துக் கொள்கிறேன், வேறு ஒன்றும் இல்லை.

எப்போதெல்லாம் கழகம் ஆட்சி புரிகிறதோ அப்போதெல்லாம் திருவண்ணாமலை வளர்ச்சி பெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் தனியாக உருவாக்கப்பட்டது, சிப்காட் பிரிக்கப்பட்டது, மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது, தனியாக போக்குவரத்து கழகம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரணியில் பொறியியல் கல்லூரி, வந்தவாசியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இவைகள் எல்லாம் அரசின் சார்பில் துவக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியில் இம் மாவட்டம் தமிழ்நாட்டில் 2வது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக அம்மாபாளையத்தில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டு வரப்பட்டது. காரப்பட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இப்படி பலவற்றை சொல்லலாம்.

See also  அதிமுக தலைவருக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்

பிரிட்டிஷ் தரைப்பாலங்கள்

தமிழ்நாட்டில் பிரிட்டிஷ்காரர்கள் காலத்து தரைப்பாலங்கள் 1281 உள்ளது. அதை மேம்படுத்துவதற்காக 2022ல் 648 பாலங்களை ரூ.580 கோடியில் மேம்படுத்த வேண்டும் என டெண்டர் விடப்பட்டு பாலங்கள் கட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு 213 பாலங்கள் ரூ.900 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. மீதி பாலங்கள் இந்த 5 வருடத்தில் கட்டி முடிக்கப்படும்.

போளூர் பாலம் நின்று போனதற்கு காரணம் நாங்களா? பாலம், பாதை அமைக்க நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டும். முதலில் ஆர்ஜிதம் செய்து அதற்கு பிறகு திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையிட்டு இருக்கிறோம். அதற்கு முன் அப்படி அல்ல. நில ஆர்ஜிதம் முடிக்காமல் டெண்டர் விடப்பட்டு பின்னர் பில்லர் மட்டும் எழுந்து நிற்கும். அப்படித்தான் போளூரில் நிலங்களை கையகப்படுத்தாமல் பணிகளை துவக்கியதன் விளைவு இன்றைக்கு அந்தப் பாலம் விமர்சனம் செய்யக்கூடிய அளவுக்கு உள்ளது.

இதற்கு காரணம் கடந்த ஆட்சி தான். நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் இந்த மாதிரி நில ஆர்ஜிதம் செய்யப்படாமல் உள்ள திட்டங்களுக்கு முறையாக ஆர்ஜிதம் செய்து பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறேன். போளூர் பாலம் ஓர் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, செய்யார் கூட்டுறவு சக்கரை ஆலை இயக்குநர் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சீ.பார்வதிசீனிவாசன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஆர்.சிவானந்தம், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, உதவி கோட்டப் பொறியாளர்கள் வி.கோவிந்தசாமி, ரகுராமன் உதவி பொறியாளர் எம்.வெங்கடேசன், சி.வேதவள்ளி, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கே.வி.சேகரன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ராணிஅர்ஜுனன், சாந்தி பெருமாள், அன்பரசி ராஜசேகரன், இந்திரா இளங்கோ, பச்யைம்மாள் சீனுவாசன் கனிமொழி சுந்தர், களம்பூர் பேரூராட்சி மன்ற தலைவர் கே.டி.ஆர்.பழனி, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், நகர தலைவர் ஏ.சி.மணி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாநில கைப்பந்து சங்கத் துணைத்தலைவர் இரா.ஸ்ரீதரன், வடமாதிமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் அல்லிரவி, அரசு ஒப்பந்ததாரர் பெரணம்பாக்கம் ஏ.மணிகண்டன், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

See also  தலைவர் சிறைக்கு போய் விடுவார்- அதிகாரி டென்ஷன்

முடிவில் திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் க.முரளி நன்றி கூறினார்.

ஹைவே-பிடபிள்யூ சொத்தை வைத்து நாட்டுக்கு கடன்

ஹைவே-பிடபிள்யூ சொத்தை வைத்து நாட்டுக்கு கடன்

விழா துளிகள்

  • அமைச்சர் எ.வ.வேலுவை வரவேற்க தடபுடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக எட்டிவாடி கூட்டு ரோட்டில் ஆரணி வழியாக செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு ஆரணியை சென்று அடைந்தன.
  • எட்டிவாடி கூட்டு ரோட்டில் தெருக்கூத்து கலைஞர்களின் நிகழ்ச்சி, கரகாட்டம், கேரள மேளத்துடன் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். பெண்கள் கும்பம் ஏந்தியும், பூக்களை தூவியும் வரவேற்பு கொடுத்தனர். எட்டிவாடி மற்றும் வடமாதிமங்கலம் கூட்டு ரோடுகளில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது.
  • அடிக்கல் நாட்டு விழாவிற்கு கும்பம் வைத்து குருக்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. குங்குமம், மஞ்சள் தடவி பூ வைத்து தரப்பட்ட செங்கல்லை வழங்கியும், கொடியசைத்தும் சாலை விரிவாக்க பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • போளூர் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 6 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படும் என போளுர் எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக ஆட்சியில் நிலம் ஆர்ஜிதம் செய்யாமல் பணி துவங்கப்பட்டதே காலதாமத்திற்கு காரணம் என இன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!