திருவண்ணாமலையில் டாக்டர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து விற்ற மருந்து கடையை அதிகாரிகள் மூடி உரிமத்தை ரத்து செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மருந்துக்கடைகளில் போதை தரும் வலி நிவாரணிகள் மற்றும் தூக்க மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலையில் மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள மருந்து கடை ஒன்றில் உரிய மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்ததை மருந்துகள் ஆய்வாளர் கோகிலா தலைமையிலான அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
மேலும் மருந்தாளுனர் மேற்பார்வை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தது, மருந்துச் சீட்டு பதிவேடு பராமரிக்காதது ஆகிய குற்றங்களுக்காக அந்த கடையை 30 நாட்கள் திறக்கக் கூடாது எனவும், அந்த கடையின் மருந்து உரிமத்தை 30 நாட்கள் இடைக்கால ரத்து செய்தும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் தி.விஜயலட்சுமி உத்தரவின் பேரில் வேலூர் மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அம்முக்குட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இன்று (1ந் தேதி) அந்த மருந்து கடை, மருந்துகள் ஆய்வாளர் கோகிலா முன்னிலையில் மூடப்பட்டது.
மருந்து கடைகளில் உரிய மருந்துச் சீட்டு இல்லாமல் போதை தரக்கூடிய வலி நிவாரணிகள், தூக்க மாத்திரை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்பவர்கள் மீது மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருந்துக் கடைகளின் உரிமம் இடைரத்து மற்றும் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் எச்சரித்துள்ளார்.
மருந்து கடை மூடப்பட்ட சம்பவம் மத்திய பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.