Homeசெய்திகள்வலி மாத்திரையால் கிட்னி பாதிக்கும்

வலி மாத்திரையால் கிட்னி பாதிக்கும்

வலி மாத்திரை சாப்பிட்டதால் கிரிகேட்டின் அளவு அதிகரித்ததை பரிசோதனையில் கண்டு பிடித்து சரி செய்து விட்டதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

விழிப்புணர்வு கூட்டம்

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் கருக்கலைப்பு மற்றும் போதை மாத்திரைகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பாக நடைபெற்றது. அனைவரையும் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.சண்முகம் வரவேற்று பேசினார்.

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கலந்து கொண்டு பேசியதாவது,

பின்தங்கிய திருவண்ணாமலை மாவட்டத்தில் விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் இருக்கின்றனர். சிகிச்சை பெற டாக்டரிடம் செல்லாமல் நேரடியாக மருந்து கடைக்கு வந்து மருந்து வாங்குகின்றனர். எனது பாட்டியே அப்படித்தான், மெடிக்கல் ஷாப் சென்று மாத்திரை வாங்கிக் கொண்டு வந்து போட்டு கொண்டு உட்கார்ந்து விடுவார். அப்போதெல்லாம் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.

வலி மாத்திரையால் கிட்னி பாதிக்கும்

கருக்கலைப்பு அதிகரிப்பு

நமது மாவட்டத்தில் இது போன்று நடப்பதற்கு காரணம் விழிப்புணர்வு இல்லாததே ஆகும். ஆஸ்பத்திரி போனா, வெயிட் பண்ணனும், டாக்டர் ஊசி போடுவாரு, அதற்கு மாத்திரையை வாங்கி சாப்பிட்டு விடலாம் என்று நினைப்பது இயல்பான விஷயம். இதை நமது மாவட்டத்திலிருந்து போக்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் ஜமுனாமுத்தூர் போன்ற பகுதிகளில் கருக்கலைப்புகள் நடந்துள்ளதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். கருக்கலைப்பு செய்வது, ஸ்கேன் சென்டர்களில் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்வது, இவையெல்லாம் பரவலாக நடப்பதற்கு காரணம் விழிப்புணர்வு இல்லாததுதான்.

மருந்து கடைகள், டாக்டர் சீட்டு இன்றி மருந்துகள் வழங்க கூடாது. தலைவலிக்கு பேராசிட்டமால் கேட்பார்கள். மருந்து சீட்டு இல்லாமல் கொடுக்கின்றனர். ஆனால் வலி மாத்திரைகளையோ, தூக்க மாத்திரைகளையோ மருந்து சீட்டு இல்லாமல் வழங்க கூடாது. தூக்கம் வரவில்லை என்பதற்கு அவில் மாத்திரை கொடுத்து அனுப்புவார்கள். இது அலர்ஜிக்கும் போட்டுக் கொள்ளலாம், தூக்கம் வரவில்லை என்றாலும் போட்டுக் கொள்ளலாம். புரூபன் போன்ற வலி நிவாரணிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் கிட்னி பாதிப்படையும்.

அதிகரித்த கிரியேட்டின் அளவு

நானே கை, கால் வலிக்கு வலி நிவாரணி மாத்திரை எடுத்தேன். பிறகு உடல் நிலையை பரிசோதித்த போது கிரியேட்டின் அளவு அதிகரித்து இருந்தது. இதனால் டாக்டர்கள் 6 மாதத்திற்கு தண்ணீர் அதிகமாக குடியுங்கள் என்று கூறினர். குடித்த பிறகு கிரியேட்டின் அளவு சரியாகி விட்டது.

கொரோனா நேரத்தில் அதிக விலைக்கு மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டது. நிறைய இடங்களில் மொத்தமாக விற்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை ஏற்பட்டது. மாத்திரை கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக நிறைய பேர் வாங்கி வாங்கி வீட்டில் இருப்பு வைத்துக் கொண்டார்கள். இதனால் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரைகள் கிடைக்காமல் போய்விட்டது.

மாஸ்க் விலை ரூ.2 ஆயிரம்

கொரோனா நேரத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் 10 ரூபாய் மாஸ்க் 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 3டி போன்ற மாஸ்க்குகள் 2000 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டது. எனவே மாத்திரைகளை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது, அதிக விலைக்கும் விற்கக் கூடாது.

நமது மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகமாக உள்ளனர். படிப்பே இல்லாமல் மருத்துவம் பார்க்கின்றனர் இது எப்படி இருக்கிறது என்றால் மெக்கானிக் தெரியாதவர்கள் வண்டியை ரிப்பேர் செய்வது மாதிரி. இதை தடுக்க மருத்துவத்துறை அலுவலர்கள் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சிறிய வயதில் பெண்கள் கர்ப்பம் ஆவதும், குழந்தை திருமணம் நடைபெறுவதும் இந்த மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. இதை தடுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வலி மாத்திரையால் கிட்னி பாதிக்கும்

எல்லா கடைகளிலும் காலாவதியான மருந்துகள் உள்ளது

உதவி இயக்குநர் பேச்சு

வேலூர் மண்டல மருந்துகள் கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ஜி.அம்முகுட்டி பேசியதாவது,

அலோபதி மருந்துகளில் பக்க விளைவுகள் உண்டு. சில மருந்து கடைகளில் விலை உயர்ந்த மருந்துகளை மட்டும் குளிர்சாதன பெட்டியில் வைக்கிறார்கள். குறைந்த விலையிலான சில மருந்துகளையும் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். ஆனால் வைப்பதில்லை. படிக்காதவர்கள் வந்து மருந்து கேட்டால் தூக்கி கொடுத்து விடுகிறீர்கள்.

ஆனால் அந்த மருந்து சாப்பாட்டுக்கு முன்பு பயன்படுத்த வேண்டுமா?, பின்பு பயன்படுத்த வேண்டுமா? என்றெல்லாம் நீங்கள் சொல்வதில்லை. ஒரு தரமான கண் மருந்து வாங்குபவர்களுக்கு அது எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாது. இதனால் கண்களில் பாதிப்புதான் அதிகமாகும். மருந்துகளை நீங்கள் பதப்படுத்தவில்லை என்றால் கோடைகாலத்தில் சில மருந்துகள் குறித்து புகார்கள் வரும். மாத்திரைகள் அப்படியே கையில் ஒட்டும்.

காலாவதியான மருந்துகள்

மருந்து கடைகளில் பதிவேடுகளை பராமரிப்பதில்லை. காலாவதியான மருந்துகள் எல்லா கடையிலும் உள்ளது. எனவே காலாவதியான மருந்துகளை விற்கக் கூடாது. ஒரு மருந்து காலாவதியாகிவிட்டால் உடனடியாக அது சம்பந்தப்பட்ட பாக்ஸ்களில் அடைத்து விட வேண்டும். பாக்ஸ்களில் விற்பனைக்கு இல்லை. நாட் பார் சேல் (Not for sale) என்ற வார்த்தை இருக்க வேண்டும். ஆன்லைனில் மருந்து வாங்கினால் எங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்கள். மருந்து கடைகளில் மருந்தாளுனர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் ஏ.அன்பரசி, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்டீபன், மருந்து ஆய்வாளர்கள் எம்.கோகிலா, இம்மானுவேல் நேசகுமார் ஆகியோர் பேசினார்கள். மருந்து மொத்த விநியோகஸ்தர்கள், மருந்து கடை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள், மாவட்ட மருத்துவ வணிக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் சங்கத்தின் பொருளாளர் ஜி.சரவணகுமார் நன்றி கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!