தமிழ்நாடு அரசு நடத்திய ‘வாவ்’ தமிழ்நாடு என்ற புகைப்பட போட்டியில் திருவண்ணாமலை மலையை வித்தியாசமான கோணத்தில் படம் எடுத்த கலைஞருக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. இதே போல் சென்ற ஆண்டு நடைபெற்ற போட்டியில் 2வது பரிசு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை உலகுக்கு உணர்த்தும் விதமாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை வாவ் தமிழ்நாடு எனும் பெயரில் சிறந்த வீடியோ மற்றும் போட்டோக்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது. இதே போல் ஐ போன் ஷூட் என்ற பிரிவிலும் ஐ போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.
தொலைந்து போன மகத்துவத்தை தோண்டி எடுக்க, தமிழ்நாட்டின் வரலாற்றுப் பாதையில் பயணம் செய்து, மண்ணின் உண்மையான மகிமையை உலகுக்குக் காட்டுவதற்கு வீடியோ, போட்டோ கலைஞர்களை வாவ் தமிழ்நாடு ஊக்கப்படுத்தி வருகிறது.
3 பதிப்புகளாக இவர்கள் நடத்திய போட்டிகளில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று வழிபாட்டு தலங்களின் அற்புதங்களின் தோற்றங்கள், கலை நிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்கள், காடு, கடல் இனங்கள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், கிராமத்து உணவு, நடைபாதை கடைகள், உணவு தயாரிக்கும் கலை இப்படி கண்ணில் பட்டதை வித்தியாசமான கோணங்களில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து நடுவர் குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.
3வது பதிப்பு போட்டியில் 200 பேரின் புகைப்படங்களை ஆராய்ந்த நடுவர் குழு 100 பேரை தேர்வு செய்தது. இவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மாபெரும் வெற்றியாளர்களாக 12 பேர் அறிவிக்கப்பட்டனர். அவர்கள் பெயர் வருமாறு,
1.சரண் தஷ்ணாமூர்த்தி (திருவண்ணாமலை)
2. முரளிமோகன் கிருஷ்ணன் (சென்னை)
3. நவீன் சி (பெரம்பலூர்)
4.சலீம் பாஷா (திருச்செங்கோடு)
5. சிவசங்கர் (சென்னை)
6. அபினேஷ் சேகர் (புதுக்கோட்டை)
7. நவீன் குமார் (சேலம்)
8. சாந்த குமார் (திருப்புவனம்)
9. சிதம்பரம் சிவதாணு (திருச்சிராப்பள்ளி)
10. ஷபியுர் ரஹ்மான் (ஊட்டி-கூடலூர்)
11. ராம் ரிஷாந்தன் (சென்னை)
12. வெங்கடேஷ் ராமச்சந்திரன் (துறையூர்)
இவர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள உலக அளவிலான சுற்றுலா பயணம் காத்திருப்பதாக வாவ் தமிழ்நாடு அறிவித்துள்ளது. காற்று பலூன் சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2021-22ம் ஆண்டு நடைபெற்ற 2வது பதிப்பு போட்டியில் முதல் பரிசாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள காரை திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெனித் என்பவர் தட்டிச் சென்றார். சிறப்பு பரிசாக 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 2வது பரிசை திருவண்ணாமலையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் சரண் தஷ்ணாமூர்த்தி பெற்றார்.
2022-23க்கான 3வது பதிப்பு போட்டியில் சரண் தஷ்ணாமூர்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார். 2 பரிசை பெற்ற போதும், தற்போது முதல் பரிசை பெற்ற போதும் அவர் அடிஅண்ணாமலை கோயிலிருந்து மலையை வித்தியாசமான கோணத்தில் படம் எடுத்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலையில் வசித்து வரும் சரண் தஷ்ணாமூர்த்தியின் கேமரா கண்களில் கிளிக் ஆனவைகளில் சில…
ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் சரண் தஷ்ணாமூர்த்தியை தவிர வேறு சிலரும் ஐ போன் ஷாட் வரிசையில் திருவண்ணாமலையை படம் எடுத்து பரிசுளை பெற்றிருக்கின்றனர். அவற்றில் சில…