திருவண்ணாமலை மலையேறும் பாதையில் உள்ள 225 ஆண்டுகள் பழமையான தண்டபாணி ஆசிரமத்தில் வருகிற 29ந் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனி பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது. ஒரே ஆண்டில் 3 முறை சனி பெயர்ச்சி நடைபெறுவது குறித்து அந்த ஆசிரம செயலாளர் “ஜோதிட ரத்னா” டாக்டர் எல்.சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆயுள்காரகன் என்றுபோற்றப்படுவர் சனிபகவான். அவர் கருணையினாலேயே ஒருவர் நீடித்த ஆயுளைப் பெற முடியும். இதனால் சனிபெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் ஒரே ஆண்டில் 3 முறை சனி பெயர்ச்சி என்பது பக்தர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கணித பஞ்சாகத்தின் படி கடந்த ஜனவரி மாதம் 17ந் தேதி சனி பெயர்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் வாக்கிய பஞ்சாகத்தின் படி சனி பெயர்ச்சி எப்போது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஸ்தலத்தில் வருகிற டிசம்பர் மாதம்தான் சனி பெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மலையேறும் பாதையில் உள்ள 225 ஆண்டுகள் பழமையான தண்டபாணி ஆசிரமத்தில் வருகிற 29ந் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனி பெயர்ச்சி யாகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வாலைச்சித்தர் அறக்கட்டளை செயலாளர் ஜோதிட ரத்னா டாக்டர் எல்.சீனிவாசன் கூறியிருப்பதாவது,
பொதுவாக ஸ்ரீ சனிபகவான் சுமார் 21/2 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வார். இதுவே சனி பெயர்ச்சி எனப்படுகிறது. நிகழும் ஸ்ரீ சுபக்ருத் வருடம் பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29-03-2023) புதன்கிழமை பகல் 1.06 மணிக்கு மகர ராசியிலிருந்து பெயர்ச்சி அடைந்து கும்ப ராசியில் ஸ்ரீ சனி பகவான் சஞ்சாரம் செய்ய துவங்குகிறார்.
இந்த சனி பெயர்ச்சி தினம் மற்றும் நேரமானது, நவீன 108 நெம்பர் சுபக்ருத் வருஷ திருக்கோயில் அனுஷ்டான வாக்ய பஞ்சாங்கம் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பஞ்சாங்கமானது தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நலச்சங்கத்தின் அனுமதியுடனும், ஆதரவுடனும் வெளியிடப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி பற்றி சிலருக்கு சந்தேகம் இருப்பதை அறிகிறோம். அந்த சந்தேகத்தின் அடிப்படையில் அதற்கான விளக்கம் அளிக்க கடமைபட்டுள்ளோம். அதே சமயம் இந்த விளக்கமானது எங்களின் சொந்த அனுபவ விளக்கங்கள் மட்டுமே. இது யாரையும் எதிர்த்தோ அல்லது வாதம் செய்யவோ தெரிவிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் பொதுவாக திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் என இருவகையான பஞ்சாங்கங்கள் ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்களால் பின்பற்றப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கம் என்பது கடந்த சில நூறு வருடங்களுக்கு முன்பு திருத்தப்பட்டு நடைமுறைக்கு வந்த பஞ்சாங்கமாகும்.
வாக்கிய பஞ்சாங்கம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றி வரும் பஞ்சாங்கமாகும். இந்த வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றியே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திருக்கோயில்களில் பூஜை புனஸ்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
2023-ஆண்டு சனி பெயர்ச்சியானது திருக்கணித பஞ்சாங்கம் படி 17-01-2023 அன்றும், வாக்கிய பஞ்சாங்கம்படி 29-03-2023 அன்று என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு சங்கடமான சூழ்நிலை என்னவென்றால் சிலர் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் சனிப்பெயர்ச்சி என்கிறார்கள். இதில் எங்களின் அனுபவ அறிவைபொருத்தவரை வாக்கிய பஞ்சாங்கப்படி 29-03-2023 அன்று நடைபெறும் ஸ்ரீ சனிபெயர்ச்சியை கருத்தில் கொண்டு செய்யும் பரிகார பூஜைகள்தான் மிகச்சிறந்த பலனைத் தரும்.
ஏனெனில் வாக்கிய பஞ்சாங்கப்படி 29-03-2023 அன்றே ஸ்ரீ சனிபகவான் மகரத்திலிருந்து பெயர்ச்சியாக மற்றொரு தனது வீடான கும்பத்துக்கு சென்று விடுகிறார். இதுவே ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்களின் பெரும்பான்மையானோர் கருத்தும் கூட… கும்பத்தில் 27-06-2023 அன்று வக்ரகதி துவங்கி பின்னோக்கி சஞ்சாரம் செய்து 24-08-2023 அன்று மீண்டும் மகரத்திற்கு வருகிறார்.
மகரத்திற்கு வந்த ஸ்ரீ சனிபகவான் 23-10-2023 அன்று வரை வக்ரகதியில் இருந்து அன்றே வக்ர நிவர்த்தியாகி இரண்டு மாதங்கள் மகரத்தில் முன்னோக்கி சஞ்சரித்து பின் 20-12-2023 அன்று மீண்டும் கும்பத்திற்கே வருகிறார்.
மேற்சொன்ன சனிபகவான் வக்ர நிலையில் இருந்து விடுப்பட்டு மீண்டும் இரண்டாவது முறையாக கும்பத்திற்கு செல்வதைத்தான் சிலர் 2023 டிசம்பர் மாதம் தான் சனிப்பெயர்ச்சி என்கிறார்கள். இந்த கருத்திற்கு அவர்களை குறை சொல்லவும் முடியாது. ஏனெனில் ஸ்ரீ சனிபகவான் தன்னுடைய இரண்டு ராசிகளான மகரம் மற்றும் கும்ப ராசிகள் இணையும் இடத்தில் வக்ரம் பெறுவதே இப்படிப்பட்ட சந்தேகங்களைவரச்செய்துள்ளது.
அதே வேளையில் ஸ்ரீ சனிபகவான் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, தான் செல்லும் ராசிக்கான பலன்களை தர ஆரம்பித்து விடுவார். எது எப்படி இருந்தாலும் மகரம் மற்றும் கும்பம் ஆகிய இரு ராசிகளில் சஞ்சரிக்கும் பலன்களையும் மாற்றி மாற்றி 2023 ஆண்டில் ஸ்ரீ சனிபகவான் உலக உயிரனங்களுக்கு வழங்கவிருக்கிறார் என்பதே எங்களின் கருத்து.
எனவே, ஆன்மிக அன்பர்களே ஸ்ரீ சனிபகவான் 17-01-2023 அன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்து விட்டாரா? அல்லது 29-03-2023 அன்று பெயர்ச்சி அடையபோகிறாரா? அல்லது கும்பத்திற்கு பெயர்ச்சி அடைந்து வக்ரகதியில் பின்னோக்கி மகரத்திற்கு சென்று மீண்டுமொரு முறை 2023 டிசம்பர் மாதம் கும்பத்திற்கு பெயர்ச்சி ஆகிறாரா? என ஆய்வு செய்து குழப்பமடைய வேண்டாம்.
‘வரும்முன் காப்போம்’ என்பது போல நாம் முன்பே ஸ்ரீ சனிபகவானை வழிபட்டு பரிகாரம் (சனிப்ரீதி) செய்து கொள்வதே மிகச்சிறந்த வழியாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.