Homeசெய்திகள்தாலுகா ஆபீசில் ரஜினி மகள் படத்தின் ஷூட்டிங்

தாலுகா ஆபீசில் ரஜினி மகள் படத்தின் ஷூட்டிங்

ரஜினி மகள் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்காக திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தின் போர்டு அகற்றப்பட்டு நீதித்துறை நடுவர் மன்றம், சங்கராபுரம் என்ற போர்டு வைக்கப்பட்டதால் பொது மக்கள் குழப்பம் அடைந்தனர்.

தாலுகா ஆபீசில் ரஜினி மகள் படத்தின் ஷூட்டிங்

லால் சலாம்

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா டைரக்ஷனில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் என்ற படத்தை லைக்கா நிறுவனத்தின் சார்பில் முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர். கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தாலுகா ஆபீசில் ரஜினி மகள் படத்தின் ஷூட்டிங்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் நடிகர் ரஜனிகாந்த் கலந்து கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்புகள் செஞ்சி, திருவண்ணாமலை சுற்றுப்புறங்களில் நடத்தப்படுகிறது.

பொதுமக்கள் குழப்பம்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இன்று காலை இப்படத்தின் கோர்ட்டு சீன்களின் படப்பிடிப்பு இயக்குநர் ஐஸ்வர்யா முன்னிலையில் நடைபெற்றது. தாலுகா அலுவலகம் இன்று இயங்கிய நிலையில் தாலுகா அலுவலகத்தின் போர்டு மாற்றப்பட்டு நீதித்துறை நடுவர் மன்றம், சங்கராபுரம் என்ற போர்டு வைக்கப்பட்டது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் குழப்பம் அடைந்து இங்கிருந்த தாலுகா அலுவலகம் எங்கே மாற்றப்பட்டது என கேட்கும் நிலை ஏற்பட்டது.

See also  டோல்கேட்டில் கட்டணமின்றி சென்ற வாகனங்கள்

மேலும் பத்திர பதிவு அலுவலகம் செயல்பட்டு வரும் பகுதியில் இந்த ஷூட்டிங் நடைபெற்றது. சனிக்கிழமைகளில் பத்திர பதிவு அலுவலங்கள் இயங்கும் என்ற அறிவிப்பால் இன்று பத்திர பதிவு அலுவலகம் இயங்கியது.

தாலுகா ஆபீசில் ரஜினி மகள் படத்தின் ஷூட்டிங்
ஐஸ்வர்யா முன்னிலையில் படப்பிடிப்பு

கயிறு கட்டி தடுப்பு

இந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு அலுவலகத்திற்கு அருகில் கோர்ட்டுக்கு வக்கீல்கள் தங்களது கட்சிக்காரர்களுடன் வருவது போன்றும், அப்போது அடிதடி ஏற்படுவது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்கு வர முடியாத படி கயிறு கட்டி தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதை பற்றி கவலைப்படாமல் சினிமா குழுவினர் அங்கும், இங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.

இதே போல் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக வாகனங்களில் தளவாட பொருட்களை எடுத்து வர முடியாமல் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். படப்பிடிப்பை செல்போனில் படம் பிடிக்க முயன்ற செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களை பவுன்சர்கள் தடுத்தனர். ஒரு செய்தியாளரின் செல்போனை பறிக்கவும் முயற்சி நடந்தது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு பரபரப்பு நிலவியது.

See also  மருது பாண்டியர்களுக்கு சிலை- புல்லட் சுரேஷ் அறிவிப்பு

மதிய உணவிற்காக படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது அரசு அலுவலர்கள், தம்பி ராமையா போன்ற சினிமா குழுவினருடன் படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.

நாளையும் ஷூட்டிங்

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் மாணவ-மாணவியர்கள் தங்கும் விடுதி, உழவர் சந்தை, சர்வேயர் அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலகம், சிறார் நீதி மன்றம், பத்திர பதிவு அலுவலகம், அரசு இ சேவை மையம், அரசு கேபிள் டிவி அலுவலகம், கிளைச் சிறைச்சாலை, சார் கருவூலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், இளம் சிறார்கள் குழுமம் ஆகியவை இயங்கி வரக் கூடிய நிலையில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான நாளையும் இங்கு ஷூட்டிங் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!