திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் நேரடியாக ஈடுபட்டவனை அசாம் மாநிலத்தில் மடக்கிப் பிடித்த தனிப்படை போலீசார் விமானம் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கடந்த 12.2.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ. 72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
பெங்களுர் கோலாரில் கொள்ளையர்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் ஆரிப், ஆசாத் ஆகியோரும், கொள்ளையர்களுக்கு உதவியதாக குதரத் பாஷா, அப்சர், நிஜாமுதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
6வது குற்றவாளியாக ராஜாஸ்தான் மாநிலம் ஜவாந்தி குர்த் கிராமத்தைச் சேர்ந்த சிராஜூதின்(50) என்பவனை தனிப்படை கைது செய்தது. அவனிடமிருந்து கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ஏடிஎம் கொள்ளையில் நேரடியாக ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை அசாம் மாநிலத்தில் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
அவனது பெயர் வாஹித் (வயது 36), அரியானா மாநிலம் நூ மாவட்டம், நாவ்லி கிராமத்தைச் சேர்ந்தவன். 1 மாதமாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்தவனை தனிப்படையினர் அசாம் மாநிலம், சராய்தியோ மாவட்டம் அருகே இன்று மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
வாஹித்தை விமானம் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்த போலீசார் நீதிபதி உத்தரவின் பேரில் அவனை ஜெயிலில் அடைத்தனர்.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.