திருவண்ணாமலை டோல்கேட்டை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்திய முற்றுகை போராட்டத்தினால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதனால் டோல்கேட் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பணியாளர்கள் வெளியேறியதால் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்று வந்தன.
இனாம்காரியந்தல் டோல்கேட்
திருவண்ணாமலை அருகே இனாம்காரியந்தல் பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு டோல்கேட் அமைக்கும் பணிகள் தொடங்கியது. திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களை குறி வைத்து இந்த டோல்கேட் அமைக்கப்படுவதாகவும், இதனால் உள்ளுர் மக்களும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி அனைத்து தரப்பினரும் எதிர்த்து வந்தனர். இதன் காரணமாக கட்டி முடிக்கப்பட்டும் டோல்கேட் திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் மாநில அரசின் வசம் இருந்த இந்த சாலை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக 2022ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17ந் தேதி முதல் சுங்க சாவடி சத்தமில்லாமல் செயல்பட தொடங்கியது. இது சம்மந்தமான அறிவிப்பு ஆங்கில பத்திரிகையில் வெளியிடப்பட்டதால் பெரும்பாலோனருக்கு தெரியவில்லை.
ரூ.30 முதல் ரூ.215 வரை வசூல்
இந்த சுங்க சாவடியில் கார், ஜீப், வேன்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.30ம், வணிக வாகனங்களுக்கு ரூ.50ம், பஸ், டிரக்குகளுக்கு ரூ.110ம், கனரக வாகனங்களுக்கு ரூ.175லிருந்து ரூ.215வரையிலும் வசூலிக்கப்பட்டது. உள்ளுர் தனிப்பட்ட வாகனத்திற்கான மாதாந்திர அனுமதிச் சீட்டின் விலை ரூ.315ஆக நிர்ணயிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல்துறை அலுவலகம், நீதிமன்றங்கள், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை போன்றவைகளுக்கு அருகிலேயே சுங்கசாவடி திறக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு கெட்டு விடும் என அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
ஆனாலும் சுங்கச்சாவடி எந்தவித தடையுமின்றி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அந்த சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் சில சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பதால் இனாம்காரியந்தல் சுங்கச்சாவடி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஊழியர்கள் பணியாற்றாததால் வாகனங்கள் கட்டணமின்றி சென்று வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சட்ட விரோதமான சுங்கச்சாவடி
ஒரு சுங்கச்சாவடியில் இருந்து மற்றொரு (டோல்கேட்) சுங்க சாவடிக்கு 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு இடைவெளி இருக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தள்ளித்தான் டோல் பூத்துகள் அமைக்கப்பட வேண்டும்.
டோல்கேட் வைத்து சுங்கம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் பராமரிப்பு கட்டணமாக சேர்த்துதான் பயணிகளிடம் சுங்கம் வசூலிக்கின்றனர். அதன்படி சாலைகளில் எச்சரிக்கை குறியீடுகள், கழிப்பறை, ஆம்புலன்ஸ், மின் விளக்கு வசதி, அவசர தொலைபேசி, அவசர சிகிச்சைக்காக ஏற்பாடுகள் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அதேபோல் சாலை அமைத்து இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் அந்தச் சாலைகளை முழுவதுமாக தோண்டி மீண்டும் சாலை அமைக்க வேண்டும்.
வழிப்பறி கொள்ளை
திருவண்ணாமலை அருகே உள்ள இனாம்காரியந்தல் டோல்கேட்டில் மேற்கண்ட சட்ட விதிகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை எனவே இந்த சுங்கச்சாவடி அகற்றப்படவேண்டியது அவசியம். கேரளாவுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். மகராஷ்டிராவுடன் ஒப்பிட்டால் 15 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிப்பது வழிப்பறி கொள்ளையே என்பதை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துண்டு பிரசுரங்களை வெளியிட்டிருந்தது.
போலீஸ் பாதுகாப்பின் காரணமாக டோல்கேட்டை அகற்றும் போராட்டம், முற்றுகை போராட்டமாக மாறியது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான்கு வழிச்சாலையில் தான் டோல்கேட் அமைக்க வேண்டும் ஆனால் திருவண்ணாமலை -வேலூர் இருவழிச்சாலையில் டோல் கேட் அமைத்து வசூலிப்பது சட்டவிரோதமானது,தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு தான் ஒரு டோல்கேட் அமைக்கவேண்டும் ஆனால் திருவண்ணாமலை -வேலூர் நெடுஞ்சாலையில் 57 கிலோ மீட்டர் தூரத்தில் டோல்கேட் அமைத்து சட்டத்திற்கு விரோதமாக வசூலிக்கின்றனர்.
நீர்நிலையில் அலுவலகம்
மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு கொடுத்தும் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும் என்றால் அகற்ற செல்லும் எங்களை மாநில அரசு ஏன் தடுக்க வேண்டும்?, எத்தனை வருடம் இந்த பகல் கொள்ளை நடக்கும்?. 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்களுக்கு பாஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நீர்நிலை புறம்போக்கில் உள்ள குடிசைகள், வீடுகளை மாவட்ட நிர்வாகம் அகற்றும் போது, இங்கு நீர்நிலை புறம் போக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தை ஏன் அகற்றவில்லை? இது பற்றி மாவட்ட ஆட்சியரிடம் பேச உள்ளோம். என்றார்.