அக்னி வீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மார்ச் 15ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கர்னல் மோனிஷ் குமார் பாத்ரே தெரிவித்துள்ளார்.
இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
சென்னை தலைமையக ராணுவ ஆள் சேர்ப்பு மையத்தின் இயக்குநர் கர்னல் மோனிஷ் குமார் பாத்ரே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு அவர் கூறியதாவது,
இந்திய இராணுவத்தில் அக்னி வீர் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சேர விருப்பமும் தகுதியுமுள்ள 17 ½ வயது முதல் 21 வயதுக்குள் உள்ள ஆண்/பெண் இளம் வயதினர் இராணுவத்தில் சேர்ந்திடலாம். விருப்பமுள்ளவர்கள் http://www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ் நாட்டின் 11 மாவட்டங்களில் அதாவது திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவள்ளுர், காஞ்சிபுரம், தெற்கு மாவட்டங்களில் இருந்து ஆட்சேர்ப்பு தொடர்பானது. இரண்டு கட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
1. கட்டம் – 1 பல்வேறு தேர்வு மையங்களில் ஆன்லைன் கணினி
அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (Online CEE) .
2. கட்டம் – 2 ஆட்சேர்ப்பு பேரணி.
100 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்
பிப்ரவரி 16 முதல் மார்ச் 15ந் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தேர்வு கட்டணம் ரூ.250. பணம் SBI மற்றும் பிற வங்கிகளின் இணைய வங்கி மூலம் செலுத்தலாம். மின்னஞ்சல், மொபைல் எண், ஆதார் எண்ணை தவறாது பதிவிட வேண்டும். ஒருநபர் ஒரு பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 1மணி நேரத்தில் 50 கேள்விகள் அல்லது 2 மணி நேரத்தில் 100 கேள்விகள் பதிலளிக்க வேண்டும். SOS/ SOEX/Sportsperson/ NCC/IT/ ITI Diploma Tech./ Driving ஆகியோருக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.
ராணுவத்தில் ஆட்சேர்ப்பு நியாமானது மற்றும் வெளிப்படையானது. முற்றிலும் தகுதி அடிப்படையிலே தேர்வு செய்யப்படுவார்கள். யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம். ஆட்சேர்ப்பு செயல்முறை தானியங்கு முறையே. எந்த நிலையிலும் யாராலும் உதவ முடியாது. இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்லைன் பொது நுழைவு தேர்வு முடிந்த பிறகு ஏப்ரல் மாதம் உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. அக்னி வீர் திட்டத்தில் சேருபவர்களுக்கு 4 ஆண்டுகளில் ரூ.11 லட்சத்து 71 ஆயிரம் கிடைக்கும் என கணக்கிடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு துணை ராணுவப் படை மற்றும் மாநில போலீசில் சேர இடஒதுக்கீடும் கிடைக்கும்.