திருவண்ணாமலையில் கோயில் கோபுரத்தை கட்டிய அம்மையார் தங்கி இளைப்பாறியது கோயில் அல்ல, உணவு கூடம் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க நகர் மங்களபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார்கள்.
அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
அறநிலையத்துறைக்கு என்னை அமைச்சராக்கி இருந்தால் நான் பெயில் மார்க்கு தான் வாங்கி இருப்பேன். சேகர் பாபு நூற்றுக்கு நூறு மார்க் எடுத்திருக்கிறார். திருவண்ணாமலையில் திருக்கோயில் உள்ளது. அது உள்ளே நான் இதுவரை போனது கூட இல்லை. நான் அறநிலைத்துறை அமைச்சர் ஆனால் எப்படி இருக்கும்?
ஐயப்பன் கோவிலுக்கு 13 நாள், 7 நாள் விரதம் இருக்க வேண்டும் என்கிறார்களே, என்று சேகர் பாபுவிடம் கேட்டதற்கு அவர் இன்னைக்கு போனால் நாளைக்கு வந்து விடுவேன் என்றார். எப்படி இது சாத்தியம் என்று கேட்டேன் அவர் வழிமுறையை சொன்னார். எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அந்த ஐயப்பனையே 24 மணி நேரத்தில் பார்த்துவிட்டு வரக்கூடிய ஆற்றல் படைத்தவர் நமது அறநிலையத்துறை அமைச்சர்.
திருவண்ணாமலை திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஏறத்தாழ 100 கோடி ரூபாய் பெறுமானம் உள்ள ஒரு சொத்தை மீட்டு தரும்படி நான் அவரிடத்தில் கேட்டேன். அம்மணி அம்மாள் என்பவர் அம்மணி அம்மன் கோபுரத்தை கட்டினார். கட்டுகிறபோது அந்த அம்மையார் அங்கு இளைப்பாறுவதற்கு, அங்கு வேலை செய்தவர்களுக்கெல்லாம் உணவு கொடுப்பதற்காக ஒரு இடத்தில் தங்கினார். அது கோயில் அல்ல, உணவு கொடுப்பதற்கான ஒரு இடம். கோபுரத்தை அன்று கட்டியவர்களுக்காக உணவு பரிமாறக்கூடிய ஒரு உணவு கூடம் அது. அது 25 ஆயிரம் சதுரடி உள்ள இடம்.
திருவண்ணாமலைக்கு இன்றைக்கு கிரிவலம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். பல பேர் அறநிலையத்துறை அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். திருவண்ணாமலையில் பல ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக பலர் இருந்திருக்கிறார்கள். ப.உ.ச போன்றவர்களெல்லாம் அமைச்சராக இருந்திருக்கிறார்கள்.
எனக்கு ஆன்மீகம் என்பது குறைவாக இருந்தாலும், எங்கள் ஊருக்கு வருகிற ஆன்மீக மக்கள் பயன்பாட்டிற்காக அந்த இடத்தை மீட்டு தரும்படி அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்டேன். திடீரென்று இரவு போன் வந்தது. 25 ஆயிரம் சதுரடி இடத்தை அறநிலையத்துறை கைப்பற்றி விட்டது என்று கலெக்டர், எஸ்.பி போன் செய்கிறார்கள்.
அந்த இடத்தை அனுபவித்தது சங்கர் என்கிற பிஜேபிகாரர். எங்கள் ஊரில் பவர் புல்லான அமைப்பு வியாபாரிகள் சங்கம் தான். அவர்களும் போன் செய்து இடத்தை மீட்டது குறித்து தெரிவித்தார்கள். அதற்கு நன்றி சொல்ல வேண்டுமே என அமைச்சர் சேகர்பாபுவிற்கு போன் செய்தேன். லைன் கிடைக்கவில்லை. அரைமணி நேரம் பொறுத்து கிடைத்தது. ஐயப்பன் கோயிலில் இருப்பதாக தெரிவித்தார். கோயில் இடத்தை மீட்டு விட்டார்கள், நன்றி என தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.