Homeசெய்திகள்நகராட்சி கமிஷனர் மாற்றப்பட்டதன் பின்னணி

நகராட்சி கமிஷனர் மாற்றப்பட்டதன் பின்னணி

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து திருவண்ணாமலை நகராட்சி கமிஷனர்கள் 4 பேர் மாற்றப்பட்டுள்ளனர். 5 வது கமிஷனராக தட்சணாமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1896-ல் நகராட்சி

திருவண்ணாமலை நகராட்சி 1-4-1896 அன்று உருவாக்கப்பட்டது. 1959ல் இரண்டாம் தர நகராட்சியாகவும், 1974ல் முதல் நிலை நகராட்சியாகவும், 1998ல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2008ல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது மாநகராட்சியாக மாற உள்ளது. 13.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நகராட்சியின் மக்கள் தொகை 1லட்சத்து 45 ஆயிரத்து 278 ஆகும்.

2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திருவண்ணாமலை நகராட்சிக்கு 5 வது கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தி, சந்திரா, பார்த்தசாரதிக்கு பிறகு கடந்த ஆண்டு மே மாதம் கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனராக இருந்த முருகேசன் திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சரின் உறவினர்

இவர்களில் கமிஷனராக இருந்த சந்திரா என்பவர், ஒப்பந்ததாரர் கையில் பச்சை நிற பேனாவால் கையெழுத்திட்டு அதிர வைத்தார். செய்து முடித்த பணிகளுக்கு பணம் வழங்குவதற்காக கோப்புகளில் கையெழுத்திடுமாறு கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இவ்வாறு அவர் செய்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து சில மாதங்களில் அவர் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பிறகு தெற்கு பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினரான பார்த்தசாரதி என்பவர் கமிஷனராக நியமிக்கப்பட்டார். சில மாதங்களில் அவருக்கும், ஊழியர்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மாற்றக் கோரி நகராட்சி பணியாளர்கள் அனைவரும் கையெழுத்திட்டு அமைச்சர் எ.வ.வேலுவிடம் மனு அளித்தனர். சில மாதங்களில் அவரும் மாற்றப்பட்டார்.

See also  மகன் ஏமாற்றி விட்டதாக தாய், தந்தை தீக்குளிக்க முயற்சி
நகராட்சி கமிஷனர் மாற்றப்பட்டதன் பின்னணி
முருகேசன்

பிறப்பு, இறப்பு சான்றிதழ்

அதன் பிறகு பதவியேற்ற முருகேசன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் பிரிவு ஊழியர் பற்றாக்குறையால் 3 மாதங்களாக செயல்படாமல் முடங்கியது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. கடந்த நகரமன்ற கூட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற 35 நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது. உங்க கவர்மெண்ட் வந்து விட்டதே இதை சரி செய்யமாட்டீங்களா? என மக்கள் கேட்கின்றனர் என ஆளும் கட்சி கவுன்சிலரான மண்டி பிரகாஷ் புகார் கூறினார்.

ரூ.19 லட்சம் செலவு ஏன்?

இந்த கூட்டத்தில் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவு செயல்பட்டு வந்த இடத்தில் கமிஷனருக்கு புதியதாக அறை அமைக்க ரூ.19 லட்சத்தை ஒதுக்கீடு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கவுன்சிலர்கள் மத்தியில் புகைச்சல் கிளம்பியது. நிதி நிலைமை சரியில்லாத போது ஏற்கனவே வசதிகளுடன் கமிஷனர் அறை உள்ள நிலையில் ரூ.19 லட்சம் செலவு செய்து மற்றொரு அறை தேவைதானா? என்ற கேள்வி எழுந்தது. இது பற்றியும் ஆளும் கட்சி கவுன்சிலரான மண்டி பிரகாஷ் கேள்வி எழுப்பினார். அப்போது கமிஷனர் அலுவலகத்திற்கே வருவதில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்தார். முருகேசன், ஊழியர் விரோத போக்குடன் செயல்படுவதாக பணியாளர்களும் புகார் கூறினர்.

See also  ஒவ்வொரு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
நகராட்சி கமிஷனர் மாற்றப்பட்டதன் பின்னணி
தட்சணாமூர்த்தி

இந்நிலையில் இன்று அவர் மாற்றம் செய்யப்பட்டார். திண்டிவனம் நகராட்சி கமிஷனராக இருந்த என்.தட்சணாமூர்த்தி, திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முருகேசனுக்கு பதவி ஏதும் வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

கமிஷனர்கள் மாற்றப்பட்டதன் விவரம்

வால்பாறை கமிஷனர் கே.பாலு, கோயமுத்தூர் நகர்ப்புற ஆய்வு நிறுவனத்தின் துணை இயக்குநராகவும், பட்டுக்கோட்டை கமிஷனர் டி.சவுந்தராஜன், மறைமலைநகர் நகராட்சி கமிஷனராகவும், பழனி கமிஷனர் ஆர்.கமலா, கோவில்பட்டி கமிஷனராகவும், ராணிப்பேட்டை கமிஷனர் பி.ஏகராஜ், உதகமண்டலத்திற்கும், திண்டிவனம் கமிஷனர் என்.தட்சணாமூர்த்தி, திருவண்ணாமலை கமிஷனராகவும், நாகப்பட்டிணம் கமிஷனர் என்.ஸ்ரீதேவி, பொள்ளாச்சி கமிஷனராகவும், மன்னார்குடி கமிஷனர் கே.சென்னுகிருஷ்ணன், நாமக்கல் கமிஷனராகவும், தேனி அல்லி நகர் கமிஷனர் ஏ.வீரமுத்துக்குமார், காரைக்குடிக்கும், சிதம்பரம் கமிஷனர் எம்.அஜிதா பர்வீன், ராமநாதபுரத்திற்கும், உடுமலைப்பேட்டை பி.சத்தியநாதன், கொடைக்கானல் கமிஷனராகவும், ஆத்தூர் கமிஷனர் எம்.ஆர்.வசந்தி, கிருஷ்ணகிரி கமிஷனராகவும், மேட்டூர் கமிஷனர் எஸ்.புவனேஷ்வரன் என்கிற அண்ணாமலை தருமபுரி கமிஷனராகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர்.


Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!