திருவண்ணாமலையை விட செய்யாறு அரசு கல்லூரியில் தான் கோர்ஸ்கள் அதிகமாக உள்ளதாக கு.பிச்சாண்டி தெரிவித்தார். திருவண்ணாமலை அரசு கல்லூரியிலும் புதிய கோர்ஸ்கள் கொண்டு வரவும், பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியின் ஆண்டு விழா (2022-2023) இன்று நடைபெற்றது. அனைவரையும் கணிதத்துறை துணைத் தலைவர் க. பாலமுருகன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் ஞா.கவுரி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் கா.பு.கணேசன் விழாவுக்கு தலைமை தாங்கினார்.
சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் கு.பிச்சாண்டி பேசியதாவது,
சர் பிட்டி தியாகராயர் இட ஒதுக்கீட்டை பெற்று தந்ததன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே தமிழகம் கல்வித்துறையில் பெரும் புரட்சியை செய்து 55 சதவீதம் உயர் கல்வியில் படிக்கக்கூடிய ஒரே மாநிலமாக திகழ்கிறது. அகில இந்திய அளவில் பார்த்தால் 27 சதவீதமாகும்.
8 ஆயிரம் மாணவ-மாணவிகள்
இன்றைக்கு இந்தக் கல்லூரியில் 8 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். நான் படிக்கும்போது 1500 பேர் தான் படித்தனர் அதில் 15 பேர் பெண்கள். ஆனால் இன்றைக்கு எந்த கல்லூரியில் மாணவிகள் அதிகமாக இருக்கிறார்கள். மாணவர்கள் குறைவாக இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பெற்று தந்ததன் காரணமாகத்தான் இந்த நிலை உருவாகியது.
பிளஸ் 2வில் மாணவிகள் தான் முதல் மார்க் வாங்குகிறார்கள். அதிகமாக மாணவிகள் தான் தேர்ச்சி பெறுகின்றனர். பெண்கள் கல்வி கற்றதால் தான் தமிழகம் உயர்ந்த மாநிலமாக இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய மாநிலமாக உயர்ந்திருக்கிறது. பெண்கள் உயர் கல்வி படிப்பதற்காக மாதம் 1000 ரூபாய் என்ற புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார். இதன் மூலம் நம்முடைய கல்லூரியில் பல பெண்கள் அந்த பணத்தை பெறக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
புதிய கோர்ஸ்கள் கொண்டு வரப்படும்
முதல்வராக கருணாநிதி இருந்த போது இந்த கல்லூரிக்கு 30 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. அதன் மூலமாக கம்ப்யூட்டர் துறையில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் ஏற்பட்டது. இங்கு உருவாகியுள்ள பல கட்டிடங்கள் கட்ட பணம் என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கொடுக்கப்பட்டதாகும். புதிய வகுப்புகளும் கலைஞர் ஆட்சிதான் உருவாக்கப்பட்டன.
செய்யாறு அரசு கல்லூரியில் திருவண்ணாமலை அரசு கல்லூரியை விட அதிக அளவு கோர்ஸ்கள் உள்ளன. திருவண்ணாமலை கல்லூரியிலும் புதிய கோர்ஸ்கள் கொண்டு வர நானும், அமைச்சர் எ.வ.வேலுவும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதே போல் பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும்.
மக்கள் தொகையில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆனால் விளையாட்டுத்துறையில் பின்தங்கியுள்ளது. சிறிய நாடுகள் பல தங்க மெடல்களை பெறுகின்றன. எனவே மாணவ – மாணவியர்கள் விளையாட்டில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டால் தங்க பதக்கங்களை பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் முடிவில் கணிதத் துறையினை பேராசிரியர் ஆ. அண்ணாமலை நன்றி கூறினார்.
விழாவில் நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், பிரியா விஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.