Homeஅரசியல்திமுக அமைச்சர்கள் குறுநில மன்னர்கள்-அன்புமணி தாக்கு

திமுக அமைச்சர்கள் குறுநில மன்னர்கள்-அன்புமணி தாக்கு

திமுக அமைச்சர்கள் குறுநில மன்னர்களாக இருக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு அமைச்சர் எ.வ.வேலுதான் காரணம் என திருவண்ணாமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

6188 சதுர கிலோ மீட்டர்

6188 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி திருவண்ணாமலை ஒருங்கினைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை காந்தி சிலை முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்டச் செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் அ.கணேஷ்குமார்(கிழக்கு), ஆ.வேலாயுதம்(வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது,

115 கிலோமீட்டர் தூரம்

தமிழ்நாட்டின் நிலப்பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். முதலாவது இடத்தில் திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. இவ்வளவு பெரிய மாவட்டமாக இருப்பதனால் தான் இன்னும் வளர்ச்சி பெறாமல் உள்ளது. உதாரணத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையில் தூசி என்ற ஒரு கிராமம் உள்ளது. அந்த தூசி கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறும் ஐந்து கிலோமீட்டர் தான். ஆனால் தூசி கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றால் 115 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

இந்த மாவட்டத்தின் மேற்கு எல்லையிலிருந்து கிழக்கு எல்லைக்கு போக வேண்டும் என்றால் கிட்டதட்ட 168 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்த மாவட்டத்தை நீண்ட காலமாக பிரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட கால கோரிக்கை, தமிழ்நாட்டில் உள்ள பெரிய பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்பதுதான். அப்போதுதான் அந்த மாவட்டத்திற்கு வளர்ச்சி வரும். இதற்கு பல உதாரணங்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உள்ளன. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல வாக்குறுதிகளை கொடுத்தார்கள. ஆட்சிக்கு வந்தால் மாவட்டங்களை பிரிப்போம் என்பது அவர்கள் கொடுத்த முக்கியமான வாக்குறுதி.

டாக்டர் ராமதாஸ் தொடர் முயற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம் கிட்டத்தட்ட 13 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. அதை பிரிக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினார். ராணிப்பேட்டை மாவட்டம், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் என்று மூன்றாக பிரித்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கு 200 கிலோமீட்டர் தூரம் ஆகும். இப்போது மூன்றாக பிரித்ததால் அந்தந்த மாவட்டங்களுக்கு வளர்ச்சி வந்து கொண்டிருக்கிறது.

அதேபோன்று விழுப்புரம் மாவட்டம் பெரிதாக இருந்தது. அதனைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கினோம். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி தென்காசி என்று பிரிக்கப்பட்டுள்ளது. இப்படி பெரிய பெரிய மாவட்டங்கள் பிரிப்பதற்கு காரணமே ராமதாசும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான். வேறு யாரும் கிடையாது. இந்த கோரிக்கையை யாரும் வைப்பது கிடையாது. மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டம் வேண்டுமென எத்தனை போராட்டங்கள் நாம் நடத்தினோம், அதனால் இப்போது மயிலாடுதுறை மாவட்டம் வந்துள்ளது.

அந்த பகுதியில் இப்போது கும்பகோணத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். இங்கே திருவண்ணாமலையை இரண்டாகப் பிரிக்க வேண்டும். வந்தவாசி, செய்யார், போளூர், ஆரணி, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், திருவண்ணாமலை, செங்கம் என எட்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதனை நான்கு நான்காக பிரிக்க வேண்டும். காலையில் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றால் இரவு தான் வீட்டுக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ஒரு புகார் கொடுக்க வேண்டும் என்றாலும் இதே நிலைதான்.

அதிக மக்கள் தொகை

திருவண்ணாமலை மாவட்டம் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 24 லட்சம் பேர் வசித்து இருந்தார்கள். இப்போது இரண்டு மூன்று லட்சங்கள் ஏறி இருக்கும் 27 லட்சம் மக்கள் தொகை என்று வைத்துக் கொண்டால், இந்த மாவட்டம் ஒரு நாடாக இருந்தால், உலகத்தில் 195 நாடுகள் உள்ளன, அதில் இந்த மாவட்டம் உலகத்தின் 144 வது நாடாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு அவ்வளவு மக்கள் தொகை உள்ள மாவட்டம் இந்த மாவட்டம்.

ஏன் இந்த மாவட்டத்தை இன்னும் நீங்கள் பிரிக்காமல் இருக்கிறீர்கள்? ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. வாக்குறுதி கொடுத்தீர்களே பிரிக்கணும் என்று? திருவண்ணாமலை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமாக கடலூர் மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும். திருவள்ளூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை இன்னும் பிரிக்க வேண்டும். பிரித்தால் தான் அந்த மாவட்ட ஏழை மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும், நிர்வாகம் செயல்படும். வளர்ச்சி வரும். ஆனால் ஏன் பிரிக்க மறுக்கிறார்கள் தெரியுமா? என்ன காரணம் தெரியுமா?

இவ்வளவு காலம் காலமாக அந்தந்த மாவட்டத்தில் ஒரு குறுநில மன்னர்கள் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திமுகவின் குறுநில மன்னர்கள் தான் இப்போது இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் குறு நில மன்னர்களின் மனநிலை என்னவென்றால் என்னுடைய ராஜத்துக்கு அதிக தொகுதிகள் இருக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு பவர். மக்களைப் பற்றி எல்லாம் இவர்களுக்கு கவலை கிடையாது, ஏழை மக்கள் எப்படி அவதிப்பட்டாலும் இவர்களுக்கு கவலை இல்லை. எனக்கு நிர்வாகத்தில் 8 சட்டமன்ற தொகுதி 2 எம்பி தொகுதி இருக்க வேண்டும். எல்லா மாவட்டத்திலும் இதே நிலைதான் நடந்தது.

மக்களை பற்றி கவலையில்லை

வேலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட நான்கு எம்பி தொகுதிகள் இருந்தன. அந்த மாவட்டத்தை பிரிக்காமல் இருந்ததற்கு காரணம் என்ன என்றால் அங்கு உள்ள அமைச்சர் துரைமுருகன் தான். வேறு வழி இல்லாமல் பிரித்தாகிவிட்டது. அவர்களுடைய சுயநலத்திற்காக பிரிக்கக் கூடாது என்று கூறுவார்கள். பிரித்து விட்டால் என்ன ஆகும் இவர்களுடைய பவர் போய்விடும். இவர்களுடைய அதிகாரம் போய்விடும். அதேதான் இந்த திருவண்ணாமலை மாவட்டத்திலும் இங்கு யார் இருக்கிறார்? அமைச்சர் எ வ வேலு இருக்கிறார். அவர் இதை பிரிக்க விடமாட்டேன் என்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தை இப்படிதான் பிரிக்க விடாமல் பொன்முடி செய்து வந்தார். பல போராட்டங்களை செய்து அண்ணா திமுக ஆட்சியில் பிரித்தாகிவிட்டது. அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம் பிரித்தாகிவிட்டது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குறுநில மன்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சுயநலத்திற்காக இந்த மாவட்டத்தை பிரிக்க விடமாட்டார்கள். இவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை.

விவசாயத்தை அழித்துவிட்டு தொழில் கொடுப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவோ தரிசு நிலங்கள் இருக்கிறது. அரசு நிலங்கள் இருக்கின்றன. அதை எடுத்துக்கொண்டு நீங்கள் வளர்ச்சியை கொண்டு வாருங்கள்.

நந்தன் கால்வாய் திட்டம் கேட்டு கேட்டு காது எல்லாம் ஒரு மாதிரி அலுத்து போய்விட்டது. அண்ணா திமுக தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளிப்பார்கள், திமுக தேர்தலுக்கு முன்பு நந்தன் கால்வாய்க்கு வாக்குறுதியளிப்பார்கள், அப்படியே போய்விடும். 50 வருஷ காலமாக இதையே பேசிகிட்டு இருக்கிறார்கள். ஆனால் நடந்த பாடு இல்லை. சிறிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்த 4, 5 ஏரிகளை தூர்வாரி உள்ளார்கள். இவர்கள் எப்படி ஏரியை தூர்வார்கள் என்று தெரியும் தானே! ஒரு கோடி ரூபாயில் 20 லட்சம், மீதி 80 லட்சம் அவர்களின் பாக்கெட் சென்று விடும் இதுதான் இவர்களின் தூர்வாரும் கணக்கு.

ஆரணி பட்டு பூங்கா வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை! எவ்வளவு நெசவாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் அந்த கோரிக்கை நிறைவேறவில்லை. இந்த பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை சென்ட் பேக்டரி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். எல்லா விதமான பூக்களும் இந்த பகுதியில் இருக்கிறது. ஆனால் அதனையும் நிறைவேற்றவில்லை.

பாலாற்றை தென்பெண்ணை ஆற்றுடன் இணைத்து தென்பெண்ணையை செய்யாறில் இணைக்க வேண்டும். அதுவும் அங்கிருந்து இணைத்தால் நந்தன் கால்வாய் வெற்றிகரமாக முடித்து விடலாம். இப்படியாக இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு வளர்ச்சி பணிகளையும் செய்ய வேண்டும். செய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு மனசு கிடையாது.

எ.வ.வேலுதான் காரணம்- அன்புமணி தடாலடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரயில்வே திட்டம் வேண்டும் என்று எத்தனை போராட்டங்களை நடத்தினோம். பின்பு மத்திய அமைச்சராக ஏ கே மூர்த்தி இருந்தபோது தமிழ்நாட்டுக்கு எத்தனை ரயில்வே திட்டங்களை கொண்டு வந்தார். அரங்க வேலு கொண்டு வந்தார். இந்த வேலு கிடையாது. நம்முடைய வேலு, அரங்க வேலு.

திண்டிவனம், செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு ரயில்வே பாதை அமைக்க இப்போது தான் அதற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதனை வைத்து என்ன செய்துவிட முடியும்? திண்டிவனம் நகரி திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இந்த திட்டம் வந்தவாசி வழியாக செல்லக்கூடியது. இப்படியான வளர்ச்சி திட்டங்களை நாம் கொண்டு வந்தோம்.

நிலத்தை பறிக்கும் அமைச்சர்கள்

கடலூர் மாவட்டமும் டெல்டா பகுதியில் தான் வருகிறது. டெல்டா என்றால் இவர்களை பொருத்தவரை தஞ்சாவூர் டெல்டா, டெல்டா என்றால் திருவாரூர் டெல்டா என நினைத்துவிடுகிறார்கள். கொள்ளிடம் ஆறு கடலூர் மாவட்ட எல்லையில் தான் ஓடுகிறது. கொள்ளிடமும் காவிரியின் கிளை ஆறு தான். கொள்ளிடம் கடலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தாண்டி வடக்கில் வருகிறது. அதுவும் டெல்டாதான். அங்கு தான் இவர்கள் நிலக்கரி எடுக்குறாங்க. அதற்கு தான் நான் போராடி வருகிறேன்.

என்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் இவர்கள் அனைவரையும் (என்எல்சி நிர்வாகம்) விரட்டி அனுப்பி வைப்பேன். தமிழக சட்டப்பேரவையில் நிலக்கரி சுரங்கம் மட்டுமல்ல, விவசாயத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்திற்காகவும் ஒரு சென்ட் நிலம் கூட கொடுக்க மாட்டோம் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வருவேன். உண்மையில் உங்களுக்கு(திமுக) விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், அதை நீங்கள் சட்டமாக ஆக்க வேண்டும். ஒரு வருடமாக போராடிக் கொண்டிருக்கிறேன். அதனை மீறியும் இரண்டு அமைச்சர்கள் விவசாயிகளின் நிலத்தை மிரட்டி பறித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒருவர் வேளாண்துறை அமைச்சர். அவர் வேலை என்ன என்று அவருக்கே தெரியவில்லை. வேளாண்துறை அமைச்சரின் வேலை என்ன? வேளாண்மையை வளர்க்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அதை விட்டுவிட்டு காவல் துறையை அனுப்பி ஊர் ஊராக சென்று ‘உன் நிலத்தை ஒழுங்கா கொடுத்துவிடு. இல்லையென்றால் அவ்வளவுதான், தொலைத்து விடுவேன்’ என்று போலீசை வைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

என்எல்சிக்காரன் தான் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கொடுக்கிறான். அவன் மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு இருண்டு போய்விடும் என்று, அதெல்லாம் அந்த காலம். இப்போது தேவையில்லை. அதை விட நமக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) மூலம் மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

தமிழகத்திற்கு தேவையான உச்சபட்ச மின்சார தேவை 18000 மெகாவாட்ஸ். ஆனால் நாம் உற்பத்தியை இரண்டு மடங்கு செய்து கொண்டிருக்கிறோம். இதில் என்எல்சி காரன் பங்கு வெறும் 800 மெகாவாட்ஸ் மட்டும் தான்.

இந்த 800 மெகாவாட்ஸ் மின்சாரத்திற்காக நம்முடைய நிலத்தை பிடுங்கி, நீரை உறிஞ்சி, அதை கடலுக்கு அனுப்பி, சுற்றுச்சூழலை மாசு படுத்தி, நமக்கு வேலை வாய்ப்பு தராமல் ஏமாற்றி, 66 வருடங்களாக இந்த மண்ணை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் என்எல்சி நிர்வாகத்திற்கு தான், இந்த தமிழக அரசு நிலத்தை பிடுங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

முதலமைச்சர் அறிவிக்காவிட்டால்…

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த மூன்று நிலக்கரி சுரங்கங்கள் மட்டுமல்ல, இன்னும் மூன்று இருக்கிறது. என்எல்சியின் மூன்றாவது சுரங்கம், வீராணம் புதிய நிலக்கரி திட்டம், பாளையங்கோட்டை புதிய நிலக்கரி திட்டம் ஆகிய இந்த மூன்று திட்டங்களையும் சேர்த்து, இனி நிலக்கரி சுரங்க திட்டங்களுக்கு நிலம் கொடுக்க மாட்டோம், தமிழக அரசு அனுமதி கொடுக்காது என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். அதுவரை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்.

சேலம் எட்டு வழி சாலை பிரச்சனையை முதலில் கையில் எடுத்தது நான் தான். நமக்கு வளர்ச்சி வேண்டும், நெடுஞ்சாலைகள் வேண்டும். ஆனால் விவசாயத்தை அழித்து வளர்ச்சி வேண்டாம், நெடுஞ்சாலைகள் வேண்டாம். சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு எத்தனையோ சாலைகள் உள்ளன. அந்த சாலைகளை விரிவாக்கம் செய்தாலே போதுமானது.

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிப்போம் என்ற அறிவிப்பை வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை. சட்டத்திற்கான நியாயமான காரணங்களை மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள். இதற்குண்டான தரவுகளை எடுப்பதற்கு ஆறு மணி நேரம் தான் ஆகும். ஆனால் அதை எடுப்பதற்கு இவர்களுக்கு(திமுக) ஒரு வருடமாக மனது வரவில்லை.

இன்னும் ஒரு மாதத்திற்குள் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தமிழக சட்டமன்றத்தில் சட்டமாக கொண்டு வாருங்கள். இது ஒரு சமூக நீதிப் பிரச்சனை. சாதி பிரச்சனை கிடையாது. இந்த ஒரு மாதத்தில் சட்டம் கொண்டு வரவில்லை என்றால் கடுமையான போராட்டங்களை தமிழகம் சந்திக்கும்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

முடிவில் மேற்கு மாவட்ட செயலாளர் இல.பாண்டியன் நன்றி கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!