ஆசை ஆசையாய், தித்திக்குதே, ராம், கற்றது தமிழ். சிவா மனசுல சக்தி, நண்பன், கச்சேரி ஆரம்பம் என பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜீவா. தற்போது இவர் நடித்துள்ள கோல்மால் என்ற திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் தடகள போட்டிகளை தொடங்கி வைக்க வந்திருந்த நடிகர் ஜீவா ‘அந்த டயலாக்கை மட்டும் கேட்காதீங்க’ என வேண்டுகோள் வைத்தார்.
தேசிய ஜூனியர்ஷிப் தடகளப் போட்டி
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 21 வது தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் இன்று தொடங்கியது. 30-ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 700 தடகள வீரர்-வீராங்கனைகள் இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
இன்று நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ஜீவா பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சி.லதா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசியதாவது,
தங்கப்பதக்கம் வென்றேன்
15 வருடங்களுக்கு முன்பு நேரு ஸ்டேடியத்தில் நான் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறேன். அதுதான் எனது முதல் வெற்றி. இந்த போட்டியில் எப்படியும் வெற்றி பெற்றிட வேண்டுமென சாமியிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். அதற்குள் சிலர் ஓடியே விட்டனர். ஒருவர் தம்பி எழுந்து ஓடப்பா என்று குரல் கொடுத்த போது தான் எனக்கே தெரிந்து ஓடினேன்.
அதுதான் வாழ்க்கையில் எனக்கு நடந்த முக்கியமான விஷயம். பட்டா பாக்கியம் படாவிட்டால் லேகியம் என்று எனது படத்தில் ஒரு வசனம் சொல்லியிருப்பேன். அதேபோல் வெற்றியோ தோல்வியோ முயற்சி எடுத்து விடுவோம் என்று முழு முயற்சியோடு ஓடி வெற்றி பெற்றேன்.
ட்ரிபிள் டி வேண்டும்
வாழ்க்கையில் ட்ரிபிள் டி என்ற விஷயம் இருக்க வேண்டும் அதாவது டெடிகேஷன்(அர்ப்பணிப்பு), டேட்டர்மினேஷன்(உறுதி), டிசிப்ளின்(ஒழுக்கம்) இந்த மூன்று விஷயம் இருந்தால் வாழ்க்கையில் நினைத்ததை நிறைவேற்ற முடியும். கற்றது தமிழ் என்ற படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில்தான் நடந்தது. எனது சினிமா பயணத்தில் திருவண்ணாமலையும் ஒன்று. இதனால் இந்த நிகழ்ச்சி முடித்து சாமியை தரிசனம் செய்துவிட்டு தான் செல்வேன். அந்த டயலாக் மட்டும் சொல்ல சொல்லாதீர்கள் இன்னொரு நிகழ்ச்சியில் சொல்கிறேன்’
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது வழக்கமாக ஒரு கேமரா முன்தான் நடிப்பேன். இங்கு இவ்வளவு கேமரா உள்ளது என தமாஷாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் புல்லரிக்க கூடிய நிகழ்ச்சி இது. இது போன்று இன்னும் நிறைய போட்டிகளை நடத்த வேண்டும். இதற்காக நாங்களும் சினிமா துறை சார்பில் பக்க பலமாக இருப்போம். தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞராக இருப்பதால் விளையாட்டில் மாணவர்கள் உத்வேகம் அடைந்திருக்கின்றனர். ஏசியன் விளையாட்டிலும் கோப்பைகளை அதிக அளவில் வாங்குவார்கள்.
செல்போனா,கழுத்து வலி வரும்
விளையாட்டு வீரர்கள் ஆரோக்கிமாக இருக்க வேண்டும், செல்போனில் நிறைய நேரத்தை செலவிட கூடாது, கழுத்து வலி வரும் என்றார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன், ஜோதி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவா மனசுல சக்தி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜீவா சொல்லும் ‘மச்சி ஒரு குவாட்டர் சொல்லு’ என்ற காமெடி டயலாக் பாப்புலரானது. இதையடுத்து தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த டயலாக்கை ஜீவா சொல்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால் திருவண்ணாமலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அந்த டயலாக்கை யாரும் கேட்க வேண்டாம் என உஷாராக முன்கூட்டியே கூறி விட்டார்.
திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த தடகள போட்டிகளில் தகுதியின் அடிப்படையில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகள் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.