கீழ்நமண்டியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கும், இரும்பு உருக்காலை இருந்ததற்கான தடயமும் கிடைத்ததை அடுத்து அங்கு அகழாய்வு பணிகள் இன்று துவக்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இன்று காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் கீழ்நமண்டி கிராமத்தில் முதற்கட்டமாக ரூ.30 லட்சம் மதிப்பில் தொல்லியல் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார்.
இதையொட்டி கீழ்நமண்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கலந்து கொண்டார். முதல் கட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
கற்கால மனிதர்களின் இடுகாடு
கீழ்நமண்டி கிராமம் வந்தவாசியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்திலும், செஞ்சியில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. கிழ்நமண்டியிலிருந்து 3.27 கிலோ மீட்டர் தூரத்தில் கற்கால மனிதர்களின் இடுகாடு அமைந்துள்ளது.
தமிழ்நாடு தொல்லியியல் துறையின் மூலம் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடத்தில் 200 க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல் வட்டங்கள் உள்ளன. சில சேதமடைந்த கல் வட்டகளினுள் ஈமப்பேழையின் எச்சங்கள் காணப்படுகின்றன. இங்கே அமைந்துள்ள கல் வட்டங்கள் 3 முதல் 5 மீட்டர் வரை விட்டத்தை கொண்டதாக உள்ளன.
இரும்பு கால மண் பாண்டம்
கல் வட்டங்களைத் தவிர, இந்த தளத்தில் குத்துக்கல், கற்களில் கப் அடையாளங்கள் மற்றும் மெருகூட்டப் பயன்படுத்தப்பட்ட பள்ளங்களும் காணப்படுகின்றன. இரும்பு காலத்தை சார்ந்த மண் பாண்டங்களான கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் மற்றும் மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஒடுகள் மேற்பரப்பு ஆய்வில் நல்ல எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஒடுகள் மற்றும் கருப்பு-சிவப்பு பானை ஒடுகள் இரண்டிலும் குறியீட்டு அடையாளங்கள் உள்ளன,
ஈமப்பேழையின் துண்டுகளும் மேற்பரப்பு ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன. சேதமடைந்த நிலையில் காணப்படும் கல் வட்டத்திலிருந்து இரும்புக் கசடுகள் மற்றும் இரும்புக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. சிறிய இருமுக கற்கருவி மற்றும் புதிய கற்கால செல்ட்ஸ் போன்ற கற்கருவிகள் இந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதியில் பெருங்கற்கால எச்சங்கள் மற்றும் இரும்புக்கால குடியேற்றங்கள் குறித்த ஏராளமான சான்றுகளை நமக்கு வழங்குகிறது.
இரும்பு உருக்கும் தொழில்நுட்பம்
மேலும் முறையான ஆய்வு மற்றும் அகழாய்வு இந்த பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள புதிய வரலாற்றுக்கு முந்தைய மற்றும் இரும்புக்கால தளங்களைக் கண்டறிய வழிவகுக்கும்.
மேலும் இந்த பகுதியின் பண்பாட்டுக் காலவரிசையைப் புரிந்து கொள்ள உதவும். முக்கிய குறிக்கோள்கள் இவ்விடத்தின் பல்வேறு பண்பாட்டுக் கால வரிசையைப் புரிந்து கொள்ளுதல், புதிய கற்காலத்திலிருந்து இரும்புக் காலக்கட்டத்திற்கு மாறிய பண்பாட்டு மாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல், இப்பகுதியில் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் மற்றும் இரும்புக்கால மக்களின் ஈமபழக்க நடைமுறைகளை மதிப்பிடுதல், இவ்விடத்தின் தள உருவாக்கத்தை பகுப்பாய்வு செய்தல், பிற பெருங்கற்கால இடங்களை சரியான தொல்லியல் சூழலில் அடிப்படையில் அமையாளம் காணுதல், தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பண்டைய பண்பாட்டு எச்சங்களை ஆவணப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து இந்த அகழ்வாராய்ச்சியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அகழ்வாராய்ச்சி இயக்குநர் விக்டர் ஞானராஜ், ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி (பொறுப்பு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வரலாற்று ஆய்வு நடுவம்
கீழ்நமண்டி பகுதியில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாக குண்ணகம்பூண்டி மின்வாரிய ஊழியர் பழனி என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன் தலைமையில் ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு குன்றுகள் சூழ்ந்த இடத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்களின் ஈமக்காடு(இறந்தவர்களை புதைத்து அடையாளமிடுவது) காணப்படுகிறது. இந்த குழியில் அவர்கள் பயன்படுத்திய மண் பாண்டங்கள், இரும்பு ஆயுதங்களை வைத்து புதைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் இப்பகுதியில் இரும்பு உருக்காலை இருந்ததற்கான தடயங்களும் உள்ளன. எனவே பண்டைய தமிழர்களின் பண்பாட்டை உலகுக்கு தெரிவிக்கும் வண்ணம் தொல்லியல் துறை மூலம் அகழ்வாய்வு செய்ய வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்று ஆய்வாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also read this…
ஓம் நமசிவாயா முழக்கத்துடன் கொளுத்தும் வெயிலில் கிரிவலம்