Homeசெய்திகள்கோயில் முன்பு குப்பை, கூளம்- கலெக்டர் டென்ஷன்

கோயில் முன்பு குப்பை, கூளம்- கலெக்டர் டென்ஷன்

அண்ணாமலையார் கோயில் முன்பு குப்பை கொட்டப்பட்டிருப்பதை பார்த்து டென்ஷனான கலெக்டர் முருகேஷ், தலை சரியாக இல்லை என்றால் வால் சரியாக இருக்காது, தினமும் நான் வந்து பார்க்க முடியுமா? என கோயில் மணியக்காரரிடம் காட்டமாக கேட்டார்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அடுத்த மாதம் 4ந் தேதி மற்றும் 5ந் தேதி 2 நாட்களில் வருகின்ற சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்கவும், கிரிவலம் செல்லவும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயில் முன்பு குப்பை, கூளம்- கலெக்டர் டென்ஷன்

இதையொட்டி அண்ணாமலையார் கோயில் மற்றும் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் கலெக்டர் சென்று ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், துணை கண்காணிப்பாளர் குணசேகரன், கோட்டாட்சியர் மந்தாகினி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் க.முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஆ.கலைமணி, கோயில் செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை அலுவலர்கள் சென்றிருந்தனர்.

See also  மோசடி பெண்களிடம் பணத்தை இழந்தவர்கள் புகார் தரலாம்

கோயிலுக்கு தினமும் வர வேண்டுமா?

16 கால் மண்டபம் முன்பு குப்பையும், கூளமுமாக இருப்பதை பார்த்து டென்ஷனான கலெக்டர் முருகேஷ், கோயிலின் முன்பகுதியை பாதுகாக்க வேண்டும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு குப்பை கொட்டப்பட்டிருக்கிறது. கடைகள் வைக்க எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? கோயிலுக்கு முன்னாடி தானே உள்ளது, ஆள் போட்டு பார்க்க மாட்டீர்களா? ஏதாவது பிரச்சனை என்றால் இனிமேல் என்னை கூப்பிடாதீர்கள் என்று கோயில் மணியக்காரர் செந்திலிடம் பொறிந்து தள்ளினார்.

கோயில் ஏசி எங்கே என்று கேட்டதற்கு அவர் இல்லை என மணியக்காரர் பதில் அளித்தார். உங்களுடைய தலை சரியாக இல்லை என்றால் வால் சரியாக இருக்காது. நாங்கள் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு கடைகளை அகற்றினோம், எப்படி இரண்டு மாதத்தில் கடைகள் மீண்டும் முளைக்கின்றன? நான் தினமும் கோயிலுக்கு வந்து பார்க்க முடியுமா? வேண்டுமென்றால் சொல்லுங்கள், தினமும் வருகிறேன் என்று கோயில் மணியக்காரரிடம் காட்டமாக கேட்டார்.

ராஜகோபுரம் முன்பு கடை போட்டிருந்த பெண்ணிடம் இங்கு கடை போடக்கூடாது என கலெக்டர் கூறினார். கடை போடவில்லை என்றால் எப்படி நாங்கள் பிழைப்பது என அந்த பெண் பரிதாபமாக கேட்டார். நாங்கள் ஒதுக்கும் இடத்தில் தான் கடை போட வேண்டும். உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும், அந்த அடையாள அட்டை இருந்தால் தான் கடை போட அனுமதி அளிக்கப்படும் என கலெக்டர் அந்த பெண்ணிடம் கூறினார்.

See also  அண்ணாமலையார் கோயில் ஊழியர் தீக்குளிக்க முயற்சி

கோயில் முன்பு குப்பை, கூளம்- கலெக்டர் டென்ஷன்

அப்போது 365 என்ற விளக்கு விற்பதால் கோயிலுக்குள் கரும்புகை சூழ்ந்து மூச்சு திணறல் ஏற்படுவதாக கலெக்டரிடம் சொல்லப்பட்டது. ஏன் இந்த மாதிரியான விளக்குகளை விற்கிறீர்கள்? என கலெக்டர் கேட்டதற்கு இனிமேல் விற்க மாட்டோம் என வியாபாரிகள் கூறினர். (365 திரி கொண்ட விளக்கை ஏற்றினால் 365 நாட்களும் விளக்கேற்றிய பலன் கிடைக்கும் என்பதை நம்பி ஆந்திர மாநில பக்தர்கள் அந்த விளக்கை வாங்கிச் சென்று கோயிலுக்குள் ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்)

கொடிமரம் வழியாக மட்டுமே அனுமதி

தர்ம தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், ராஜகோபுரம் வழியே சென்று ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள அன்னதான மடம் மற்றும் பேகோபுரம் கட்டை கோபுரம் வழியாக வந்து கொடிமரம் அருகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 1000 கால் மண்டபத்தில் அமர வைக்கப்பட்டிருக்கும் 50 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள் வள்ளால மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், கொடிமரம் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். முக்கிய பிரமுகர்கள் கொடிமரம் அருகே உள்ள வாயில் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டரிடம் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

See also  படிக்காததால் குற்றம் அதிகரித்து விட்டது- கலெக்டர்

அம்மணி அம்மன் கோபுரம் எதிரே உள்ள இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் மடத்தின் முன் இருக்கும் இடிபாடுகளை உடனே அகற்றி விட்டு அங்கு கூடாரம் அமைத்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும், காவல்துறையினருக்கும் உதவும் வகையில் நிழல் குடை அமைக்க வேண்டும் என்று கோயில் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!