கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோகா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையாரை தரிசித்த பிறகுதான் வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம் என அப்போது அவர் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 10ந் தேதி 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
அம்மாநில வருவாய்துறை அமைச்சராக உள்ள அசோகா தனது சொந்த தொகுதியான பத்மநாப நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
அமைச்சர் அசோகா, இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முதலில் சம்பந்த விநாயகர் சன்னதியிலும், பிறகு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். அதன் பிறகு நவகிரகங்களையும் வழிபட்டார். அவருக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு எனது முதற் கடவுளான அண்ணாமலையாரை தரிசித்து சென்ற பிறகுதான் வேட்பு மனு தாக்கல் செய்வேன். அதன் அடிப்படையில் நானும் சக எம்எல்ஏக்களும் இன்று அண்ணாமலையாரிடம் தேர்தலில் வெற்றி பெற ஆசீர்வாதம் பெறுவதற்காக சாமி தரிசனம் செய்தோம்.
கனகபுரா தொகுதியில் நான் போட்டியிடுவது தலைமை எடுத்த முடிவு. நான் ஒரு சிப்பாயாக கட்சித் தலைமை எடுத்த முடிவை மதித்து போட்டியிடுகிறேன். 100சதவீதம் எனது வெற்றி உறுதி.
தொடர்ச்சியாக 6 முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். முதல் முறை இப்போதுதான் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறேன். கர்நாடக மாநில சாலை வளர்ச்சிக்கும், வேளாண் வளர்ச்சிக்கும், மருத்துவ துறைக்கும் மோடி அரசாங்கம் பல திட்டங்களையும், பல்வேறு வகையில் நிதி உதவிகளையும் செய்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக 100 சதவீதம் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.
ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது இயற்கை, இது ஒன்றும் புதிதல்ல, தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமானது. அதே போல் வருமான வரி, அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவைகளும் சுதந்திரமான அமைப்புகள். மன்மோகன் சிங் ஆட்சியில் கர்நாடக மாநிலத்தில் பல சோதனைகள் நடைபெற்றதை மறந்து விடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.