Homeசுகாதாரம்திருவண்ணாமலை கோயிலை பற்றி அதிக போன்கால் வருகிறது

திருவண்ணாமலை கோயிலை பற்றி அதிக போன்கால் வருகிறது

திருவண்ணாமலையில் நீண்ட நேரம் வரிசையில் நிற்கிறோம், சாமி தரிசனம் செய்ய முடியவில்லை என தனக்கு சனி, ஞாயிற்றுகிழமைகளில் அதிகமாக போன்கால் வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இந்த வருடம் சித்ரா பவுர்ணமி வருகிற 4ந் தேதி இரவு தொடங்கி 5ந் தேதி இரவு நிறைவடைகின்றது. சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்திடவும், கிரிவலம் சென்றிடவும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது.

வரிசை நீளத்தை அதிகரிக்க வேண்டும்

சித்ரா பவுர்ணமிக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் என்பது கூட்ட நெரிசல் இல்லாத தன்மை, கோடை வெயில் தாக்கத்தை தணிக்க தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வழங்குவது, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, நிறைவான தரிசனம் ஆகும். இந்த தேவைகளை எப்படி செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளோம்.

கோயிலுக்குள் பக்தர்களின் வரிசை நீளத்தை அதிகரிக்க வேண்டும். குறைவாக இருப்பதனால் தரிசனத்திற்கு நேரம் அதிகமாகிறது. இதனால் வரிசையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரிக்கும் போது வரிசையில் நிற்கும் பக்தர்களை மேற்பார்வையிடுவதற்கும், பராமரிப்பதற்கும் கூடுதலான பணியாளர்கள் தேவை. கூடுதலான பணியாளர்கள் இல்லாமல் எவ்வளவு நீளமான வரிசைகள் இருந்தாலும் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

சாமி தரிசனம் நிகழும் இடத்தில் சாமியை பார்த்தவுடன் அவர்கள் விரைவாக செல்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள். கோயில்களில் உழவார பணி செய்ய ஆன்லைனில் அனுமதி பெறலாம் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனால் உழவாரப்பணி அதிகமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை கோயிலை பற்றி அதிக போன்கால் வருகிறது

பக்தர்களுக்கு சேவை செய்பவர்களுக்கு அனுமதி

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்கோயிலில் சேவை செய்வதற்கு ஆன்லைனில் அனுமதிக்கிறோம் என்று அறிவித்தால் நிச்சயம் வருவார்கள். அவர்களுக்கு காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி அட்டையும் கொடுத்தால் வரிசையை ஒழுங்குப்படுத்த முடியும். பணியாளர்களை நியமித்து சம்பளம் கொடுப்பதை விட திருக்கோயிலுக்கு சேவை செய்ய விரும்புகிறவர்களை வைத்து அந்த பணியை விரைவாகவும், சிறந்த முறையிலும் செய்ய முடியும்.

அதேபோல் திருக்கோயிலுக்குள் தரிசனம் செய்யும் இடத்தில் ஆரத்தி தட்டு, பிரசாதம் கொடுப்பதை தவிர்த்து விட்டு வெளியில் வரும்போது வழங்கினால் சிறப்பாக இருக்கும். அதற்கும் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் எனக்கு திருவண்ணாமலை கோயிலைப் பற்றித்தான் நிறைய போன் கால்கள் வருகிறது. அதிக நேரமாக நாங்கள் வரிசையில் நிற்கிறோம், தரிசனத்திற்கு விரைவாக செல்ல முடியவில்லை என சொல்கின்றனர். இதனால் வரிசையை அதிகப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,

தமிழ்நாட்டில் அதிகமாக கூட்டம் கூடும் இடங்கள் திருக்கோயில்கள் தான். புகழ்பெற்ற விசேஷங்கள் நடக்கிற கோயில்களில் திருவண்ணாமலையும் ஒன்று. கார்த்திகை தீபத்தை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து சிறப்பாக நடத்தியிருக்கின்றன. சித்ரா பவுர்ணமியையும் குறை இல்லாமல் நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பவுர்ணமி அன்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நீண்ட தூரம் நடந்து கோயிலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது என கூறுகிறார்கள். இந்த தூரத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் இருந்து காவல் துறையை பாதுகாப்பு பணிக்கு அழைக்க வேண்டும்.

மின் தடையே இருக்க கூடாது- எ.வ.வேலு கண்டிப்பு

ஆசிரியர் வேலைக்கு காலை 8 மணிக்கு போய் விட்டு மாலை 5 மணிக்கு வந்து விடலாம். அதிகாரிகள் ஒன்பதரை மணிக்கு வந்து விட்டு ஐந்தரை மணிக்கு சென்று விடலாம். அரசு சார்ந்த அதிகாரிகளுக்கு நேரம் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறைக்கு நேரம் காலமே இல்லை. 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் காவல்துறைக்கு இது போன்ற காலங்களில் ஷிப்டு முறையில் பணியாற்ற வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பணிகளை கண்ணும், கருத்துமாக பார்க்க முடியும்.

வெயில் காலம் என்றால் மின்சார பிரச்சனை இருக்கும். எங்கு பவர் கட் ஆனாலும் பரவாயில்லை, கோயிலை சுற்றிலும் பவர் கட் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திருக்கோயிலுக்குள் செல்லும்போது இருட்டாக இருக்க கூடாது. மருத்துவ முகாம் நடைபெறும் போதும் மின்சாரம் தேவைப்படும். எனவே மின்சாரத்துறை இதில் அதிகமாக கவனம் செலுத்திட வேண்டும். உலகத்தில் உள்ள அத்தனை பேரும் இங்கு வரும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாக பேசக்கூடிய நிலைமைகள் வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.வீ.முரளிதரன், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், எ.வ.வே.கம்பன், கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரேசன், எம்.எஸ்.தரணி வேந்தன், நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!