என்னால் முடியாததை வேறு யாராலும் செய்ய முடியாது என தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு, 40 ஆண்டு காலம் மக்களையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியவில்லை என குறிப்பிட்டார்.
சிறப்பு முகாம்
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவம்பட்டு, கல்லொட்டு, வேளையாம்பாக்கம், பழையனூர். கண்டியாங்குப்பம் ஆகிய ஊர்களில் பொதுமக்களிடம் குறைகேட்கும் சிறப்பு முகாம் இன்று நடந்தது. தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்குகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு திட்டங்களில் வீடுகள், மேநீர் தேக்கத்தொட்டி, வீட்டுமனைப்பட்டா, பள்ளி கட்டிடங்கள், பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, புதிய ரேஷன் கார்டு, ஏரி தூர்வாருதல், கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
நலத்திட்ட உதவி
சம்பந்தப்பட்ட மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, அரசு விதிமுறைக்கு உட்பட்டிருந்தால் கோரிக்கைகள் உடனுக்கு டன் நிறைவேற்றப்படும். அதோடு, நிராகரிக்கப்படும் மனுக்களுக்கு உரிய காரணங்கள், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
கொரோனா நிதி ரூ.4ஆயிரம் வழங்க முதல் கையெழுத்து இட்டவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அடிப்படையில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்திலும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பெரும்பான்மையாக பட்டா வழங்க வேண்டும், பட்டா மாற்றம் செய்ய வேண்டுமென மனுக்கள் வருகிறது. முதியோர் உதவி தொகை, ஜாதி சான்று கேட்டு மனுக்கள் வருகிறது. விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றப்படும். ஏரியில் வீடு கட்டி விட்டு பட்டா கேட்டால் கொடுக்க முடியாது. முதல்வர் நினைத்தால் கூட கொடுக்க முடியாது. நீர் நிலைகளில் பட்டா கொடுக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டு இருக்கிறது.
எனவே திரும்ப, திரும்ப மனு கொடுப்பதால் எந்த பலனும் இல்லை. நடக்காத காரியத்துக்கு மனு கொடுப்பதால் பேப்பர்தான் வீணாகும், உங்கள் நேரமும் வீணாகும். என்னால் செய்ய முடியவில்லை என்றால் வேறு யாராலும் செய்யவே முடியாது. மக்களுக்காக எதையும் செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவம் உள்ளவன். 40 ஆண்டு காலம் உங்களையும்(பொதுமக்கள்) என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியவில்லை. அதனால்தான் சிறிய மனு என்றாலும் அதற்கு முக்கியத்துவம் தருகிறேன்.
கண்டு கொள்ள மாட்டோம்
விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூடலூரில் உள்ள எனது மாமியார் முதியோர் உதவி தொகை வேண்டும் என்றால் கிடைக்குமா? நியாயமா ஏழை எளியவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்குத்தான் முதியோர் உதவி கிடைக்க வேண்டும் அதுதான் விதியும் கூட. நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளுக்கு இந்த காரணத்தால் கொடுக்க முடியவில்லை என கடிதம் வரும். சில பேருக்கு பட்டா இருக்காது. புறம்போக்கு இடங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அனுபவித்து விட்டு போங்கள். நாங்கள் அதை கண்டு கொள்ள மாட்டோம்.
கல்லொட்டு கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்ட அரசுக்கு அந்த காலத்தில் இடத்தை தானமாக தந்தவரின் மனைவிக்கு முதியோர் உதவித் தொகை தரவில்லை என மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். வசதியானவர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்க வாய்ப்பு இல்லை.
இவ்வாறு எ.வ.வேலு பேசினார்.
இந்த முகாமில் கலெக்டர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் வீர்பிரதாப்சிங், ஊராட்சி உதவி இயக்குநர் சரண்யாதேவி, தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணிகலைமணி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.