ரயில் டிக்கெட் பதிவு மோசடிக்காக விதவிதமான சாப்ட்வேரை தயாரித்தவரை மும்பைக்கு சென்று ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
21.7.2022 அன்று வேலூரில் சட்டவிரோத ஐஆர்சிடிசி (பயணிகளுக்கு உணவு வழங்கல், இணையவழி பயணச்சீட்டுப் பதிவுக்கான இந்திய ரயில்வேயின் துணை நிறுவனம்) முன்பதிவு தொடர்பாக 5 கடைகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஐஆர்சிடிசி சாப்ட்வேரில் நுழைந்து டிக்கெட் பதிவு செய்து ரூ.500 வரை கூடுதல் விலைக்கு விற்றதும், இதற்காக அவர்கள் மென்பொருள்(சாப்ட்வேர்) ஒன்றை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
இதையடுத்து 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஐஆர்சிடிசி தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஷார்ப் (SHARP) என்ற மென்பொருளை ஆய்வு செய்ததில் அது தட்கல் சாப்ட்வேர் ஆல்.இன் என்ற இணையதளம் மூலம் விற்கப்படுவதை திருச்சிராப்பள்ளி ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த பாதுகாப்பு ஆணையாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு கண்டுபிடித்தது.
இந்த சாப்ட்வேரை விற்பனை செய்தவர் பீகாரைச் சேர்ந்த சைலேஷ் யாதவ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை பீகாருக்கு சென்று அங்கு டானாபூரில் தட்கல் சாப்ட்வேர் ஆல்.இன் என்ற இணையதளத்தை நடத்தி வந்த சைலேஷ் யாதவ்வை (வயது 27) கைது செய்தனர்.
இது சம்மந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் சாப்ட்வேர்கள் மூலம் ரூ.56 கோடிக்கு 1 1/4 லட்சம் டிக்கெட்டுகளை விற்றிருப்பது தெரியவந்தது. மேலும் சைலேஷ் யாதவ், அந்த சாப்ட்வேரை விற்பனை செய்பவர் என்பதும், அந்த சாப்ட்வேரை உருவாக்கியவர் மும்பையைச் சேர்ந்த சம்ஷேர் ஆலம் நிசார் அகமத்(40) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்ய ரயில்வே போலீசின் தனிப்படை மும்பை விரைந்தது. அங்கு கிழக்கு மும்பை டிட்வாலா கவ்தேவிமந்திர் எனும் இடத்தில் சம்ஷேர் ஆலம் நிசார் அகமத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் ஷார்ப், டீஸ், நெக்ஸஸ்பிளஸ், பியூஷன் போன்ற சாப்ட்வேர்களை உருவாக்கி தனக்கு கீழ் விற்பனையாளர்களை நியமித்து ரூ.500 மாதந்திர கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு விற்றது தெரிய வந்தது.
சம்ஷேர் ஆலம் நிசார் அகமத் தயாரித்த சாப்ட்வேர் மூலம் ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளத்தை தவிர்த்து தட்கல், பிரீமியம் தட்கல், பொது டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ள முடியும். சம்ஷேர் ஆலம் நிசார் அகமத் 2012ம் ஆண்டிலிருந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததும், இதற்காக வெளிநாட்டு மொபைல் எண்ணையும், 4 போலி இந்திய மொபல் எண்களையும், 3 போலி வங்கி கணக்குகளையும், 6 வங்கி கணக்குகளையும், 5 மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து சம்ஷேர் ஆலம் நிசார் அகமத்தை கைது செய்த ரயில்வே போலீசார் திருவண்ணாமலைக்கு இன்று அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த மென்பொருளால் ஐஆர்சிடிசி-க்கு நஷ்டம் இல்லை, ஆனால் பொதுமக்களுக்குத்தான் பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ள ரயில்வே துறை நெட் பேங்க் விவரங்களை தருவது மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்றும், பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்தியைப் பெற்றால், டிக்கெட் முன்பதிவு செய்யாமல் ரயில்வேவுக்கு தெரியப்படுத்தவும், வெளிநாட்டு மொபைல் எண் அழைப்புகளை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.