திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள இடங்கள் இன்று அதிரடியாக மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்னை, வேலூர் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப் பகுதிகளிலான பொற்குணம், பள்ளிக்கொண்டாப்பட்டு, அடிஅண்ணாமலை, துரிஞ்சாபுரம் உள்பட பல ஊர்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவற்றில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்து சமய அறநிலை துறை இறங்கியுள்ளது.
திருவண்ணாமலை துராபலி தெருவில் புகழ் தியேட்டர் அருகில் 8 ஆயிரம் சதுர அடிக்கு மேல் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் 3486 சதுர அடி இடம் வீடுகள் கட்டியும், கடைகள் கட்டியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 2009 ம் ஆண்டுக்கு பிறகு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயிலுக்கு வாடகை வருவது நின்று போனது. இந்த இடங்களை சிலர் கையகப்படுத்தி உள் வாடகை விட்டு சம்பாதித்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலை துறை நடவடிக்கை எடுத்தது. இது சம்பந்தமாக கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் இந்த இடங்களை அண்ணாமலையார் கோயில் சுவாதீனப்படுத்திக் கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று காலை கோர்ட்டு அமினாக்கள் முன்னிலையில் 2 வீடுகள், 4 கடைகளை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சுவாதீனப்படுத்தியது. அப்போது கோயில் இணை ஆணையாளர் வே.குமரேசன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இதன் மூலம் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள இடத்தை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மீட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கடைகளிலிருந்த பொருட்களை கோயில் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு கடை உரிமையாளர்களே பொருட்களை வேன் மூலம் எடுத்துச் சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதை பார்க்க கூட்டம் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நகரின் பிரதான இடத்தில் 8 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள இடத்தில் கடைகள், வீடுகள் போக மற்ற பகுதிகள் புதர்கள் மண்டி உள்ளது. எனவே அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் இந்த இடத்தை சீர்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்கான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.