திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடத்தின் கோபுரம் ரூ.2கோடியில் புதுப்பிக்கப்படும் என்றும், மீதமுள்ள இடம் பக்தர்கள் பயன்பாட்டிற்காக மாற்றப்படும் என்றும், பார்க்கிங் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சித்ரா பவுர்ணமியை யொட்டி வருகிற 4 மற்றும் 5ந் தேதிகளில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லவும், அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்துவது குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு இன்று வருகை தந்து ஆய்வு செய்தார்.
அப்போது சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு அவர் மோர் வழங்கினார்.
பிறகு அவரும், அமைச்சர் எ.வ.வேலுவும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட அம்மணி அம்மன் மடத்தைச் சென்று பார்வையிட்டனர். அதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ரிஷிவந்தியம் கோயில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் மற்றும் சங்கர வேணுகோபால சுவாமி திருக்கோயில் ஆகியவற்றை இன்று காலை சென்று ஆய்வு செய்தோம். இந்த 2 திருக்கோயில்களிலும் விரைவாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்த ஆலோசனைகளை வழங்கியிருக்கிறோம். அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 குளங்களை புனரமைக்க உத்தரவிட்டுள்ளோம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த 23 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட இடத்தை மீட்டுள்ளோம். ரூ.100 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடத்தில் ரூ.2 கோடி செலவில் அம்மணி அம்மாள் கோபுரம் (மடத்தின் கோபுரம்) புதுப்பிக்கப்படுவதோடு மீதமுள்ள இடம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதை முன்னிட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் பயன்படுத்துவதற்காக இடத்தை பார்வையிட்டுள்ளோம்.
பெருந்திட்ட வரைவு உருவாக்கம்
அண்ணாமலையார் கோயிலுக்கு பெருந்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி கொண்டிருக்கிறோம். திருப்பதி, மலையில் அமைந்திருக்கிற திருக்கோயில். அங்கு அதிக அளவு நிலப்பரப்பு இருக்கிறது. இங்கு(திருவண்ணாமலையில்) அதிக அளவு கோயிலை ஒட்டி குடியிருப்பு அமைந்திருக்கிறது. இந்த இடத்தில் திருப்பதிக்கு நிகராக படிப்படியாக வசதிகளை செய்து தர இருக்கிறோம்.
சட்டமன்றத்தில் 4 திருக்கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கென்று நேரத்தை ஒதுக்குவது என முடிவு செய்திருக்கிறோம். அதில் திருவண்ணாமலை கோயிலும் ஒன்று. சிறப்பு தரிசனத்திற்கான நேரத்தை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.
அறங்காவலர்கள் விரைவில் நியமனம்
அறங்காவலர் குழுவை பொறுத்த வரையில் நூற்றுக்கணக்கானோர் மனு செய்திருக்கிறார்கள். அவைகளை விசாரித்து கொண்டிருக்கிறோம். இதற்காக முன்னாள் நீதிபதிகள், ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், மடாதிபதிகள் அடங்கிய சிறப்பு குழு பரிசீலித்து திருவண்ணாமலை கோயிலுக்கு அறங்காவலர் நியமிப்பது குறித்து முடிவு எடுக்கும்.
இதுவரை 30 மாவட்டத்திற்கு குழுக்கள் அமைத்திருக்கிறோம். இந்த குழுக்கள் வாயிலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் அறங்காவலர்களை நியமித்திருக்கிறோம். இது விரைவுப்படுத்தப்படும்.
தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ.4 ஆயிரத்து 250 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மீட்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு வேட்டை தொடரும்.
சென்னை தம்புசெட்டித் தெருவில் பாப்பாம்மாள் என்பவர் இறப்பதற்கு முன்பாக தனது இடத்தை மருத்துவ மையமாக பயன்படுத்த வேண்டும் என்று 1987ம் ஆண்டு உயில் எழுதி விட்டு சென்ற 6 ஆயிரம் சதுர அடி இடத்தை மீட்டு இருக்கிறோம். அதில் மருத்துவமனையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதே போல் இந்த இடத்தையும் (அம்மணி அம்மன் மடம்) பக்தர்கள் பயன்படுத்தக் கூடிய சிறப்பு வாய்ந்த இடமாக உருவாக்குவோம். வாகன நிறுத்துமிடத்திற்கு முன்னுரிமை அளிப்போம்.
வரிசை நீண்டிருந்தால்தான் விரைவு தரிசனம் ஏற்படும். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையை ஏற்படுத்துகிற பணியை மேற்கொண்டிருக்கிறோம். இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழிக்கக் கூடிய நல்ல சூழ்நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.
யானை வாங்க சட்டத்தில் இடமில்லை
யானையை ஒருவர் வாங்க வேண்டும் என்றால் அதற்கு சட்டத்தில் இடமில்லை. ஏற்கனவே அனுமதி பெற்று வளர்த்து கொண்டிருப்பவர்கள் யானையை திருக்கோயில்களுக்கு தானமாக தரலாம். அப்படி யாராவது தானமாக கொடுக்க வந்தால் ஏற்றுக் கொள்வோம். புதியதாக திருக்கோயில்களுக்கு யானைகளை பெறக் கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் அனுமதியை பெற்று இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீடு செய்ய உள்ளது. வருங்காலங்களில் புதியதாக யானைகளை பெறுவதற்கான அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, இந்து அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், துறை செயலாளர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் வீர்பிரதாப்சிங், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, சி.என்.அண்ணாதுரை எம்பி, நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, கோயில் இணை ஆணையர் வி.குமரேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.