பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்திற்காக திருவண்ணாமலையிலிருந்து ரயில்,பஸ்,விமானம் மூலம் 270 மாணவிகள் சுற்றுலா சென்றனர்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்திற்கான தமிழ்நாடு சுற்றுலா துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி மாணவிகளுக்குகான கல்வி சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இன்று கொடியசைத்து துவக்கி வைத்து பள்ளி மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
திருவண்ணாமலையில் இருந்து கோயம்புத்தூர் வரை 52 பெண் குழந்தைகளும், திருவண்ணாமலையில் இருந்து சாத்தனூர், செஞ்சி போன்ற பகுதிகளுக்கு 156 பெண் குழந்தைகளும், திருவண்ணாமலையிலிருந்து வேலூர் வரை 50 பெண் குழந்தைகளும், திருவண்ணாமலையில் இருந்து திருச்சி சென்னை செல்ல 12 மாணவிகளும் என மொத்தம் 270 மாணவிகள் இந்த கல்வி சுற்றுலாவில் பங்குபெறுகின்றனர்.
இதன் சிறப்பு என்னவென்றால் மூன்று விதமான பயண அனுபவத்தை மாணவிகளுக்கு வழங்கி உள்ளோம். அதன்படி பேருந்து, ரயில் மற்றும் விமானங்களில் கல்வி சுற்றுலா செல்கின்றனர். இதற்கான ஏற்பாட்டை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் பெண் குழந்தைகளுடைய வளர்ச்சியும், பாதுகாப்பும், அவர்களுடைய மேம்பாடும் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தைச் சேர்ந்த பாலசுப்பரமணியன், மாவட்ட திட்ட அலுவலர் பா.கந்தன், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.