Homeசெய்திகள்ரூ.4 ஆயிரம் தந்ததை மறந்து விட்டிருப்பார்கள்-அமைச்சர்

ரூ.4 ஆயிரம் தந்ததை மறந்து விட்டிருப்பார்கள்-அமைச்சர்

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் வீடு தேடி ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு கையெழுத்திட்டார். ரூ.4 ஆயிரம் கொடுத்ததை மறந்து விட்டிருப்பார்கள் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கனந்தம்பூண்டி, பண்டிதப்பட்டு, ஆணாய்பிறந்தான் ஆகிய ஊராட்சிகளில் அமைச்சர் எ.வ.வேலு, பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.

முதலாவதாக கனந்தம்பூண்டியில் பொதுமக்களிடமிருந்து அமைச்சர் எ.வ.வேலு மனுக்களை பெற்றார். அப்போது அவர் பேசியதாவது,

நடக்கிற ஆட்சி நல்லாட்சி

சென்ற முறை 5 ஊராட்சிகளில் 2221 மனுக்கள் பெறப்பட்டதில் 50 சதவீத மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, தையல் மிஷின் கேட்டு மனுக்கள் வந்துள்ளது. இப்போது நடக்கிற ஆட்சி, ஒரு நல்லாட்சி.

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் முதன்முதலாக கையெழுத்திட்டது ரூ.4ஆயிரம் வழங்கும் திட்டத்திற்குத்தான். வீடு தேடி ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு கையெழுத்திட்டார். ரூ.4 ஆயிரம் கொடுத்ததை மறந்து விட்டிருப்பார்கள். 3 நாளுக்கு முன்பு என்ன சாப்பிட்டோம் என்பதையே பலர் மறந்து விட்டிருப்பார்கள்.

மகளிர் சுய உதவிக் குழு கடன்களை ஒரே கையெழுத்தில் ரத்து செய்தவர் நமது முதல்வர். புதிய திட்டமாக பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு பண்டிதப்பட்டு, ஆணாய்பிறந்தான் கிராமங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசியபோது இந்த மனுக்கள் பெறும் முகாமில் வீட்டு மனை பட்டா, பசுமை வீடு, பேருந்து வசதி, தையல் மிஷன், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை கோரி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது ஒன்றன்பின்ஒன்றாக துறைவாரியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.4 ஆயிரம் தந்ததை மறந்து விட்டிருப்பார்கள்-அமைச்சர்

அமைச்சரை வரவேற்ற அதிமுக தலைவர்

நீர்நிலைகளில் வீடுகட்டி பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் குடியிருப்பாளர்களுக்கு பட்டா கேட்டால் வழங்க இயலாது நீதிமன்ற உத்தரவு உள்ளதால் இந்தகோரிக்கையை நிறைவேற்ற இயலாது. அரசு விதிகளுக்குட்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் தகுதியான பயனாளிகளின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

ஆணாய்பிறந்தானில் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் கே.தருமராஜ், அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிறகு அவர் அமைச்சரிடம் 4 கோரிக்கை மனுக்களை கொடுத்தார்.

அந்த மனுக்களில் அவர் தனது ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சமுதாயக் கூடம் கட்டித் தர வேண்டும் என்றும், கிரிவல பாதையில் (தூர்வாசர் கோயில் பின்புறம்) புறம்போக்கு இடத்தை கூட்டுறவு துறைக்கு பட்டா கொடுத்துள்ளனர். ஏற்கனவே ஊராட்சி இடத்தை கூட்டுறவு துறைக்கு கொடுத்துள்ள நிலையில் இந்த பட்டாவை ரத்து செய்து ஊராட்சிக்கு வருவாய் பெருக்க கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிரிவலப்பாதை கழிவறையை பராமரிக்க முடியவில்லை

கிரிவல பாதையில் பக்தர்கள் பொதுமக்கள் பயன்படுத்த இலவச கழிவறை இயங்கி வருகிறது. இதை பராமரிக்க போதிய ஆட்கள் இல்லை, எனவே பராமரிக்க முடியாத நிலையில் கழிவறையை கோயிலுக்கோ அல்லது தனியாரிடமோ ஒப்படைக்க வேண்டும். கிரிவல பாதையில் வாரப்பட்ட குப்பைகளை கொட்டுவதற்கு ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இடம் ஒதுக்கி தர வேண்டும். பெரும்பாக்கம் சாலையிலிருந்து சமுத்திரம் ஏரிக்கு செல்லும் ஓடையை தனி நபர் ஆக்கிரமித்து உள்ளதால் தண்ணீர் போக வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி நீரோடையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் மனுதாரர் ஒருவர் சமுத்தரம் ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தப்படுவதாக புகார் மனுவை அமைச்சரிடம் அளித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் சி.என்.அண்ணாதுரை எம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி கூடுதல் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சரண்யாதேவி, நெடுஞ்சாலை துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் க.முரளி, திருவண்ணாமலை முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன் மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிரித்திவிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) மரியதேவ் ஆனந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் சுபாசெல்வமணி, ஊராட்சி செயலாளர் பி.செல்வமணிமற்றும் துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!