Homeசெய்திகள்நெகட்டிவ் அதிகாரிகள் யார்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

நெகட்டிவ் அதிகாரிகள் யார்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

வாணாபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நெகட்டிவ் அதிகாரிகள் யார் என்பது குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கினார்.

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சே.கூடலுர் மற்றும் வாணாபுரம் ஊராட்சிகளில் நடைபெற்ற அரசு விழாக்களில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு ரூ.134.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 35 புதிய கட்டிடங்களை திறந்து வைத்து 1752 பயனாளிகளுக்கு ரூ.889.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வாணாபுரத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,

எனது அரசியல் வாழ்க்கை 50 ஆண்டுகளை தொட்டுக் கொண்டிருக்கிறது. இந்த 50 ஆண்டு காலத்தில் நான் 7 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும் பொறுப்பேற்று இருக்கிறேன். மாநில நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று நான் கலைஞரிடம் கற்றுக் கொண்டேன்.

மாவட்ட நிர்வாகம் என்பது மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் நடைபெறுகிறது. மாநிலம் என்று எடுத்துக் கொண்டால் பல்வேறு துறைகள் இருக்கும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு செயலாளர் இருப்பார் அல்லது இயக்குனர்கள் இருப்பார்கள். ஆனால் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் தான் ஒட்டுமொத்த துறையும் இயங்குகிறது. ஒரு பொருத்தமான மாவட்ட ஆட்சித் தலைவர் அமைந்தால் தான் அந்த மாவட்டம் வளர்ச்சி அடையும்.

See also  அதிகாரிகள் பற்றி குறையா?விவசாயிடம் எகிறிய கலெக்டர்

அமைச்சராக இருந்து நான் ஆணையிட்டாலும் எனக்கு கீழே இருக்கிற துறையின் செயலாளரும் அதை நிறைவேற்ற வேண்டும் எண்ணினாலும் கடைசியாக பயனாளிகளுக்கு போய் சேர வேண்டும் என்றால் அரசுக்கும் பயனாளிகளுக்கும் பாலமாக இருந்து செயலாற்றுவது மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட நிர்வாகமும்தான்.

அதிகாரிகள் இரண்டு வகையாக இருப்பார்கள். ஒன்று எப்படியாவது மக்களுக்கு திட்டங்களை சேர்த்து விட வேண்டும் என எண்ணி அதற்கு வழிமுறைகளை எப்படி காணலாம்? பிரச்சனை இருந்தால் எப்படி தீர்க்கலாம்? சட்டத்தில் ஏதாவது விலக்கு இருக்கிறதா? என்றெல்லாம் பார்ப்பார்கள். அரசு போட்டிருக்கிற பல்வேறு ஆணைகளில் விதிமுறைகள் இருக்கும். திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் இதையெல்லாம் நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என அரசின் சார்பாக அமைச்சராக இருக்க நான் தான் ஆணைகளை போடுகிறேன்.

நெகட்டிவ் அதிகாரிகள் யார்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

அப்படி போடும் போது சில வகையான கண்டிஷன்கள், சில வகையான கூறுகளை அமைத்து தான் ஆணைகளை போடுகிறோம். அந்த ஆணைகளை மட்டும் படித்துவிட்டு விதிமுறை இப்படி இருக்கிறது என கூறி உதவி செய்வதற்கு வழியில்லை என்று விட்டு விடுவார்கள் சில அதிகாரிகள்.  அந்த ஆணைகளில் கடைசியாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக தளத்துக்கு சென்று பார்த்து அதை செய்யலாம், மாவட்ட ஆட்சித் தலைவர் நினைத்தால் பணிகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டு இருப்போம். பல அதிகாரிகள் இதை படிப்பதில்லை.

See also  திமுக அமைச்சர்கள் குறுநில மன்னர்கள்-அன்புமணி தாக்கு

மேலோட்டமாக படித்து விட்டு அரசு ஆணையே இப்படி உள்ளது என சொல்லி விடுவார்கள். அவர்கள் எப்படி என்றால் நெகட்டிவ் அதிகாரிகள். எதையும் முன்னோக்கி சிந்திக்க மாட்டார்கள் இப்படியும் அதிகாரிகள் உண்டு. ஒரு முறைக்கு இரண்டு முறை ஆணைகளை படித்துப் பார்த்துவிட்டு எப்படியாவது திட்டங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என எண்ணி அந்தப் பணிகளை சிறப்பாக செய்கிற முன்னோக்கு அதிகாரிகளும் உண்டு. அந்த வகையில் முன்னெடுத்துப் போகிற மாவட்ட ஆட்சித் தலைவரை இந்த மாவட்டம் பெற்றிருக்கிறது. மாவட்ட வளர்ச்சிக்கும் அது காரணமாக அமைகிறது.

துறையின் சார்பாக ஆணைகளை போடுவோம், ஆனால் அது மக்களை போய் சேராது. அந்த திட்டங்கள் மக்களை போய் சேர மாவட்ட நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் திட்டங்கள் போய் சேராது.

இன்று பெண்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாகவும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்களாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த நிலையிலும் பெண்களாகவே இருக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர்தான். சத்துணவில் சத்தான உணவு இல்லையே என புரதச்சத்து அதிகமுள்ள முட்டைகளை சத்துணவுடன் வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தவர் கலைஞர். அவர் வழியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தினை கொண்டு வந்திருக்கிறார்.

See also  ஒவ்வொரு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழச்சியில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி, மு.பெ.கிரி எம்.எல்.ஏ, முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், எ.வ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, ஊராட்சி உதவி இயக்குநர் சரண்யாதேவி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் பரிமளா கலையரசன், அய்யாக்கண்ணு, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பூங்கொடி நல்லதம்பி, சே. கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயஸ்வரி சக்கரவர்த்தி, வாணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சி.மாதேஸ்வரன் மற்றும் மாவட்ட அதிகாரிகள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!