பவுர்ணமி தோறும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 10 புகழ் பெற்ற கோயில் பிரசாதங்கள் விற்பனை செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் வருவதை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவலப்பாதையில் பழனி தண்டாயுதபாணி கோயில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற 10 திருக்கோயில்களின் பிரசாதங்கள் கிடைக்கும் வகையில் விற்பனை மையம் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டிருந்தார்.
அதன்படி சித்ரா பவுர்ணமியான நேற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அண்ணாமலையார் கோயிலின் உபகோயிலான நேர்அண்ணாமலை கோயிலில் பிரசாத விற்பனை மையம் துவக்கப்பட்டது. விற்பனையை கோயில் இணை ஆணையாளர் வே.குமரேசன் துவக்கி வைத்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலைப்பட்டியல் விவரம்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில்- மிளகு, வடை, அதிரசம்- ரூ.50
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்- பஞ்சாமிர்தம்- ரூ.35
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில்- கோடி தீர்த்தம்- ரூ.20
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்- அதிரசம்- ரூ.15
சமயபுரம் மாரியம்மன் கோயில்- குங்கும பிரசாதம்- ரூ.3
பண்ணாரி மாரியம்மன் கோயில்- ராகி லட்டு- ரூ.10
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்- குங்கும பிரசாதம்- ரூ.10
அழகர்கோயில் கள்ளழகர் கோயில்- சம்பா தோசை- ரூ.40
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்- திணை மாவு- ரூ.30
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்- அதிரசம், தேன்குழல்- ரூ.50