சேத்துப்பட்டு அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கோயில் திருவிழாவிற்கு சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
போளூரை அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமாரின் மகன் வடிவேலழகன்(39), ராமசாமி மகன் சங்கர்(35), மாணிக்கம் மகன் ஆனந்தன்(45), சின்னத்தம்பி மகன் சிவராமன்(32). வடிவேலழகன் தனியார் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர்கள், வசூர் கோயிலில் நடைபெறும் திருவிழாவிற்காக இன்று சேத்துப்பட்டிற்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்கள். சேத்துப்பட்டை அடுத்த கிழக்கு மேடு கூட்ரோடு அருகே சென்ற போது போளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சும், அந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் வடிவேலழகன், சங்கர், ஆனந்தன், சிவராமன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பிரகாஷ் (37) என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உருக்குலைந்து கிடந்த காரில் இருந்து உடல்களை தீயணைப்பு வீரர்கள் காரை உடைத்து வெளியில் எடுத்தனர். போலீசார் 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் விழாவிற்கு பொருட்களை வாங்கச் சென்றவர்கள் விபத்தில் இறந்த செய்தியை கேட்டு வசூர் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.