4 வயது சிறுவனை மதுபான கூட்டத்திற்குள் அனுமதித்த ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 23 பேர் மரணம் அடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளச் சந்தையில் மதுபானம் குடித்து இருவர் இறந்த நிலையில் அனுமதி இல்லாமல் பார் நடத்துபவர்கள், அனுமதி நேரத்தை மீறி இயங்கும் பார்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 21 வயதுக்கு மேற்பட்ட நபர்களை மட்டுமே மதுபான கூடங்களில் உள்ளே அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவண்ணாமலை பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். மேலும் ஓட்டல்களிலும், வீடுகளிலும் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பார் ஒன்றில் 4 வயது மகனை அருகில் அமர வைத்து அவரது தந்தை தனது நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. சிறுவனை மதுபான கூடத்தில் அனுமதித்தது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரித்ததில் அந்த இடம் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் இயங்கி வரும் பார் என்பது தெரிய வந்துள்ளது. 21 வயதிற்கு மேற்பட்டவர்களை மட்டுமே பாரில் அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறையை காற்றில் பறக்க விட்ட அந்த மதுபான கூடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த பார் ஆளும் கட்சி ஆதரவுடன் நேரக் கட்டுப்பாட்டை மீறி இரவு 12 மணி வரை செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
மகன்களின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் அவர்களின் முன் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, அவைகளை வாங்கி வரச் செய்வது போன்ற செயல்களை செய்யும் திருந்தாத தந்தையர்களுக்கு துணை போவது போல் 4 வயது சிறுவனை மதுபான கூடத்தில் அனுமதித்த ஓட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.