கலசப்பாக்கம் அருகே தலைமை ஆசிரியை வீட்டின் கதவுகளை உடைத்து 80 பவுன் நகை, ரூ.2லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. தொடரும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் அருகே உள்ள புதிய விண்ணுவாம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் தேவன்(வயது 54). சிமெண்ட் வியாபாரி. இவருக்கு விண்ணுவாம்பட்டு, கலசப்பாக்கம், வில்வாரணி ஆகிய மூன்று இடங்களில் சிமெண்ட் கடைகள் உள்ளன. இவரது மனைவி சுந்தரி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 19ந் தேதி கணவன்- மனைவி இருவரும் சென்னையில் நடைபெற்ற உறவினரின் திருமணத்திற்கு சென்று விட்டு இன்று ஊர் திரும்பி வந்தனர். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவும், உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டனர்.
பீரோவில் இருந்த 80 பவுன் நகைகளையும், 3 கிலோ வெள்ளியையும், ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து தேவன் கலசப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
இது சம்மந்தமாக கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கலசப்பாக்கம் பகுதிகளில் சமீப காலமாக கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. முக்கியமாக ஏடிஎம் மிஷினை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட ஊர்களில் கலசப்பாக்கமும் ஒன்று. சொகுசு காரில் வரும் நபர்கள், மக்களிடம் பேச்சுவார்த்தை கொடுத்து அவர்களிடம் இருக்கும் நகை, பணங்களை பறித்து செல்லும் சம்பவங்களும் நடந்தேறி உள்ளது. இச்சம்பவங்களில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கலசப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கென தனி இன்ஸ்பெக்டர் இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் ஆசாமிகளை பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே உடனடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.