திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 365 என்ற விளக்கை ஏற்றுவதற்கு கலெக்டர் தடை விதித்துள்ளார். இந்த விளக்கை ஏற்றும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், விளக்கை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
365 திரி கொண்ட விளக்கை ஏற்றினால் 365 நாட்களும் விளக்கேற்றிய பலன் கிடைக்கும் என்பதை நம்பி பக்தர்கள் அந்த விளக்கை வாங்கிச் சென்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் பக்தர்கள்தான் இந்த விளக்கை வாங்கிச் சென்று ஏற்றுகின்றனர். இதன் காரணமாக இந்த விளக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது.
இந்த விளக்கை ஏற்றுவதனால் கோயிலுக்குள் கரும்புகை பரவி பக்தர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதோடு, சுற்றுச் சூழலும் பாதிப்படைகிறது. இதனால் இந்த விளக்கை விற்பனை செய்யக் கூடாது என கோயில் அலுவலர்கள், வியாபாரிகளை எச்சரித்தனர். ஆனாலும் விற்பனை நடைபெற்றது.
சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலையார் கோயிலுக்கு ஆய்வு செய்ய சென்ற கலெக்டர் பா.முருகேஷ், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விளக்கை பற்றி கேட்டறிந்தார். இதையடுத்து 365 என்ற விளக்கை விற்க கூடாது என கடைகாரர்களை அவர் எச்சரித்து விட்டு சென்றார்.
இந்நிலையில் இன்று கோயிலுக்குள் ஆய்வுக்கு சென்ற கலெக்டர் முருகேஷ், 365 விளக்கிலிருந்து கரும்புகை கிளம்புவதை பார்த்து இது சம்மந்தமாக அதிகாரிகளை விளக்கம் கேட்டார். என்ன சொல்லியும் வியாபாரிகள் 365 விளக்கின் விற்பனையை நிறுத்தாதது பற்றி எடுத்துக் கூறினர்.
இதையடுத்து கலெக்டர் முருகேஷ் இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
தற்போது, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு அருகே 365 நாட்கள் பலன் கொண்டது எனத் தெரிவித்து பஞ்சினால் செய்யப்பட்டு மேற்புறம் நெய் தடவிய மஞ்சள் நிற உருண்டையான விளக்கு விற்பனை செய்யப்பட்டு, திருக்கோயில் அருகே ஏற்றப்படுகிறது, இந்த விளக்கு எளிதில் அணையாமல் சுற்றுச்சுழலுக்கு மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்துவதுடன் எளிதில் தீ விபத்தினை ஏற்படுத்தும் வாய்ப்பினையும் ஏற்படுத்தும்.
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகம் அருகே 365 நாட்கள் பலன் கொண்டது எனத் தெரிவித்து பஞ்சினால் செய்யப்பட்டு மேற்புறம் நெய் தடவியமஞ்சள் நிற உருண்டையான விளக்கினை விற்பனை செய்யவும், திருக்கோயில் அருகே ஏற்றவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விளக்கினை விற்பனை செய்யும் கடைகள் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை வாயிலாக வழக்கும் பதிவு செய்யப்படும். விளக்கினை ஏற்றுபவர்கள் மீது அபராதமும் விதிக்கப்படும்
இவ்வாறு கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.