Homeசெய்திகள்கள்ளச் சாராய வேட்டை: திமுக கவுன்சிலர் கைது

கள்ளச் சாராய வேட்டை: திமுக கவுன்சிலர் கைது

திருவண்ணாமலை அருகே போலீசார் நடத்திய கள்ளச்சாராய வேட்டையில் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் கைதானார். அதே போல் திமுக கிளைச் செயலாளரும் கைது செய்யப்பட்டார். சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்.ஐ உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரத்தை அடுத்த மரக்காணம், மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூர் ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் குடித்த 23 பேர் உயிரிழுந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர கள்ளச் சாராய வேட்டை நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 14ம்தேதி முதல் இன்று வரை 270 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்ந்து கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய வேட்டையின் போது 4,450 லிட்டர் ஏரிசாராயமும் கைப்பற்றப்பட்டு வருவாய்த்துறையினர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 5,800 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு போலீசாரும் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளச் சாராய வேட்டை: திமுக கவுன்சிலர் கைது
ஒன்றிய கவுன்சிலர் காந்தி

இன்று அவர்கள் நடத்திய வேட்டையில் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் விற்ற திமுகவைச் சேர்ந்த திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் காந்தியை (வயது 63) போலீசார் கைது செய்தனர். இவர் திருவண்ணாமலை தாலுகா வள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்தவர். இதே போல் தச்சம்பட்டு காலனியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் ஏழுமலை(55) என்பவர் உள்பட 11 பேர் கைதானார்கள். இவர்களில் 3 பேர் பெண்கள்.

கள்ளச் சாராய வேட்டை: திமுக கவுன்சிலர் கைது
ஏழுமலை

கைது செய்யப்பட்ட ஒன்றிய கவுன்சிலர் காந்தி, வள்ளிமலையில் ஓட்டல் கடை நடத்தி வந்தார். கடந்த பல வருடங்களாக அவர் மதுபானங்களை இங்கு பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. கள்ளச்சாராய வேட்டையில் ஒன்றிய கவுன்சிலரே கைது செய்யப்பட்டிருப்பது ஆளும் கட்சி தரப்பில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனைக்கு போலீசார் சிலர் துணை போவதாக காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்ணமங்கலம் சிறப்பு உதவி ஆய்வாளர் அருள், தானிப்பாடி தலைமை காவலர்கள் நிர்மல், சிவா, செங்கம் காவல்நிலைய தலைமை காவலர் சோலை, கீழ்கொடுங்காலூர் காவல் நிலைய தலைமை காவலர் ஹரி ஆகியோரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தனிப்பிரிவு போலீசார் சிலரும் ஆயுதப்படை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!