Homeசெய்திகள்சர்ச்சைக்குரிய விபூதி பாக்கெட்-தெரியாது என்கிறது கோயில் நிர்வாகம்

சர்ச்சைக்குரிய விபூதி பாக்கெட்-தெரியாது என்கிறது கோயில் நிர்வாகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு அன்னை தெரசா படம் பொறித்த விபூதி, குங்கும பாக்கெட்டுகளை வழங்கிய விவகாரத்தில் 2 அர்ச்சகர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். கோயில் அலுவலகத்தில் இந்து முன்னணி தர்ணா போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் விபூதி, குங்குமம் பிரசாத பாக்கெட்டுகள், பைகள் ஆகியவை தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாக பெறப்படுகிறது. இதில் அந்த நிறுவனத்தின் பெயர் மட்டும் இடம் பெறும். நிறுவனத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த படங்களும் இடம் பெறாது. இதை பின்பற்றி பூர்விகா செல்போன் நிறுவனம், பச்சையப்பா சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், பூம்புகார் துணியகம் உள்ளிட்ட நிறுவனங்கள் பிரசாத பைகள் மற்றும் பாக்கெட்டுகளை வழங்கும்.

சர்ச்சைக்குரிய விபூதி பாக்கெட்-தெரியாது என்கிறது கோயில் நிர்வாகம்

அன்னை தெரசா படம்

இந்நிலையில் சென்னை, திருவண்ணாமலை உள்பட தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் ரெடிமேட் துணி கடைகளை நடத்தி வரும் மேத்யூ கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்துடன் கூடிய விபூதி, குங்கும பாக்கெட்டுகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்நிறுவனம் ஆண்டனி மேத்யூ என்பவரால் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த பாக்கெட்டின் முன்புறம் அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன் படமும். பின்புறம் அன்னை தெரசா படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. தெரசாவின் படத்திற்கு கீழே “அன்பின் கரங்கள்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மாற்று மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசா படம் இடம் பெற்றது இந்து அமைப்புகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாக்கெட்டுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பக்தர்கள் இதில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

சர்ச்சைக்குரிய இந்த பாக்கெட்டுகள் சிவகாசியில் தயாரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 20 ஆயிரம் பாக்கெட்டுகள் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்துள்ளது. தெரசா படம் பொறித்த பாக்கெட் வழங்கப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகவே பக்தர்களுக்கு கொடுத்தது போக மீதி இருந்த பாக்கெட்டுகள் வழஙகப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இது சம்மந்தமாக அண்ணாமலையார் கோயில் இணை ஆணையாளரிடம் மனு அளிப்பதற்காக இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் இரா.அருண்குமார், நகரத் தலைவர் என்.செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் கோயிலுக்குள் சென்றனர். இந்து முன்னணியினர் வருவது தெரிந்ததும் அலுவலகத்தில் இருந்த இணை ஆணையாளர்(பொறுப்பு) குமரேசன், அலுவலகத்தை விட்டு வெளியேறிதாக சொல்லப்படுகிறது.

இந்து முன்னணி தர்ணா

இதனால் ஆத்திரம் அடைந்த இந்து முன்னணியினர் அவரது அறையின் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அலுவலக கண்காணிப்பாளர், அவர்களுடன் பேசி சமரசப்படுத்தி மனுவை பெற்றுக் கொண்டார்.

சர்ச்சைக்குரிய விபூதி பாக்கெட்-தெரியாது என்கிறது கோயில் நிர்வாகம்

அந்த மனுவில் இந்து முன்னணியினர் கூறியிருப்பதாவது,

இந்து மதத்தின் புனித ஸ்தலமானதும், பஞ்சபூத ஸ்தலத்தில் அக்னி ஸ்தலமானதும், உலகப்புகழ்பெற்ற இந்து மத தர்மத்தின் அடையாளமாக விளங்கும் அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் ஆன்மீக பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும் சுவாமி மூலஸ்தானத்தில் விபூதி (திருச்சாம்பல்) மற்றும் அம்பாள் சன்னதியில் குங்குமத்தை பிரசாதமாக வழங்கும் பண்பாடு தொன்றுதொட்டு வழங்கும் அம்சமாகும்,

மதமாற்றத்தை ஊக்குவிக்கும்

அருணாசலேசுவரர் ஆலயத்தின் புராதனத்தையும், புண்ணியத்தையும், இந்துமத அடையாளத்தையும் கெடுக்கும் நோக்கத்தோடு சில கிறிஸ்துவ மிஷனரிகள், தங்களின் கிறிஸ்துவமத பிரச்சாரம் செய்யவும், மதமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும், அண்ணாமலையார் ஆலயத்திற்கு நாள் தோறும் பல மாநிலங்களிலிருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஒரு உள்நோக்கோத்தோடு கடந்த 1-5-2023 திங்கட்கிழமையன்று அண்ணாமலையார் ஆலயத்தில் பக்தர்கள் தரிசித்த பின்பு, விபூதி கவரில் கிறிஸ்துவ மதத்தை சார்ந்த தெரசா படம் ஒருபுறமும், அருள்மிகு அண்ணாமலையார் அருட்பிரசாதம் என்கிற வாசகம் அடங்கிய (MATHEWGarments) மேத்யூ கார்மென்ஸ் கவரில் உள்ளது.

இந்த கிறிஸ்துவத்தின் அடையாளம் அச்சிட்டு அண்ணாமலையார் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு விபூதி கொடுக்கும் நிகழ்வு தங்கள் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு தெரியாமல் எப்படி யாரால் வந்தது? இந்த கவரை நன்கொடையாக கொடுக்க சொல்லி யார் கேட்டது? மேலும் இந்த கவரில் விபூதி நிரப்பி அண்ணாமலையார் மூலஸ்தானத்தில் யாருடைய பணியின் போது கொடுத்தது என தீர விசாரித்து சம்மந்தபட்ட நபர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

தவறும் பட்சத்தில் அண்ணாமலையார் ஆலயம் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆன்மீக அன்பர்கள், சிவனடியார்கள், இந்து மத உணர்வாளர்களை ஒன்று திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறாமல் வழங்கப்பட்டுள்ளது

இந்நிலையில் சர்ச்சைக்குரிய விபூதி, குங்கும பாக்கெட் விவகாரத்தில் சோமநாத குருக்கள், முத்துகுமாரசாமி குருக்கள் ஆகிய 2 அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாகத்திற்கு தெரியாமல் சர்ச்சைக்குரிய விபூதி குங்கும பிரசாத பாக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக அந்த அர்ச்சகர்களுக்கு அனுப்பியுள்ள பணி நீக்க உத்தரவில் இணை ஆணையாளர் வே.குமரேசன் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில், முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் என நீதிமன்றத்தின் மூலமாகவோ, இந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் உத்தரவோ எதுவும் பெறாமல், இத்திருக்கோயிலில் முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகமாக பணிபுரியும் கே.சோமநாத குருக்கள் மற்றும் ஏ.முத்துகுமாரசாமி குருக்கள் ஆகியோர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய விபூதி குங்கும பிரசாத கவரினை திருக்கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் 01.05.2023 அன்று பக்தர்களுக்கு வழங்கப்பட்டது தொடர்பாக வரப்பெற்ற தகவல் அடிப்படையில் விசாரணை செய்த வகையில், அவ்வாறு பிரசாத கவர் திருக்கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி வழங்கி தன்னிச்சையாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது தெரிய வருவதாலும், திருக்கோயிலுக்கு அவப்பெயர் மற்றும் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இருவரையும் ஆறு மாத காலத்திற்கு முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் பணியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

போராட்டம் தொடரும்

அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது, பணியில் அஜாக்கிரதையாக இருந்த கோயில் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி தெரிவித்துள்ளது.


Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!