திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மின் விளக்குகள் எரியாததால் செல்போன் வெளிச்சத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் பவுர்ணமி, கார்த்திகை தீபத் திருவிழா போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையை வலம் வந்து அண்ணாமலையார்- உண்ணாமலை அம்மனை வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு கிழமைகளிலும் மலையை வரும் வருவதற்கு பலன்கள் சொல்லப்பட்டிருப்பதாலும், பிள்ளை பேறு, தொழில் வளம், வேலை வாய்ப்பு, வினை தீரவும், குடும்ப சுபிட்சத்திற்காகவும் பவுர்ணமி, தீபத்திருவிழா மட்டுமன்றி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் கிரிவலம் செல்கின்றனர்.
விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி வருகின்றனர்.
மாலை நேரங்களிலும், இரவிலும் அதிக அளவில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதற்காக கிரிவல பாதையில் அனைத்து இடங்களிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின்விளக்குள் சரிவர எரியாத நிலை உள்ளது.
நேற்று முன்தினம் நிருதி லிங்கம் முதல் நித்தியானந்தர் ஆசிரமம் வரை மின் விளக்குகள் எரியாததால் அப்பகுதி முழுவதும் இருட்டு சூழ்ந்திருந்தது. இதனால் பக்தர்கள் தங்களது செல்போனில் உள்ள டார்ச்சை ஒளிரச் செய்தபடி கிரிவலம் மேற்கொண்டனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கையை பிடித்தப்படி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
கிரிவலப்பாதையில் மின் விளக்குகள் அடிக்கடி எரியாமல் போய் விடுவது பக்தர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மாதந்தோறும் உண்டியல் மூலம் ரூ.2 கோடியை எட்டும் அளவு பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதும், கிரிவலப்பாதையில் விளக்குளை பராமரிக்க கூடுதல் ஊழியர்களை நியமித்து மின் விளக்குகளை எரியச் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.