Homeசெய்திகள்நீங்கள் தமிழ் பற்றாளரா? ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

நீங்கள் தமிழ் பற்றாளரா? ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்படுவதன் மூலம் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத பெருமை தமிழகத்திற்கு கிடைத்திருக்கிற போது அதை அங்கீகரித்து இருந்தால் ஸ்டாலின் போன்றோரெல்லாம் உண்மையிலேயே தமிழ் பற்றாளர்கள் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீவிஜய் பாலாஜி மகாலில் திருவண்ணாமலை அருணை இன்போ சர்வீஸ் சார்பில் இன்று மாலை நடைபெற்ற படித்த இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அவரிடம் செய்தியாளர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட வீடுகளில் சோதனைக்கு சென்ற வருமான வரி துறையினர் தாக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு நான் ஆக்கபூர்வமாக பேச வந்தேன், தாக்கப்பூர்வமாக பேச வரவில்லை, இதுபற்றி தமிழக அரசியல்வாதிகளிடம் கேளுங்கள் என பதில் அளித்தார்.

நீங்கள் தமிழ் பற்றாளரா? ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

தொடர்ந்து அவர் கூறியதாவது,

தமிழர்களுக்கு பெருமை

நாளைய தினம் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது. இதற்கு நாம் வாழ்த்துக்களை நாம் தெரிவிக்க வேண்டும். இந்த பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவது குறித்து இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் பெருமை பட்டாலும் கூட தமிழர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்று உள்ளது. அது என்னவென்றால் செங்கோன்மை என திருவள்ளுவர் எந்த நல்லாட்சியை எடுத்துக் கூறினாரோ அதன் அடையாளமான செங்கோல் நிறுவப்பட இருக்கிறது.

See also  ஒரே இரவில் 127 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது

ஆகவே எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பெருமை தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறது. அந்த செங்கோல் இருந்ததா? இல்லையா? அதை ஆட்சி மாற்றத்துக்கு தான் கொடுத்தார்களா? என அதையும் அரசியல் ஆக்கி உள்ளார்கள். நிச்சயமாக இங்கே இருந்து ஆதீனங்கள் எடுத்துச் சென்று ஆட்சி மாற்றத்திற்கு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் அதை எங்கேயோ ஒரு இடத்தில் போட்டு இருக்கிறார்கள். அதை எடுத்து தமிழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் பாராளுமன்றத்தில் நிறுவ இருக்கிறார்கள்.

தமிழ் பற்று அரசியல் சார்ந்தது

பாராளுமன்றம் எவ்வளவு வருஷம் இருக்குமோ, அவ்வளவு வருஷம் அந்த செங்கோல் இருக்கும், தமிழர்களின் பெருமையும் இருக்கும். எனவே தமிழர்கள் ஒவ்வொருவரும் இதற்கு பெருமைப்பட வேண்டும். தமிழக முதலமைச்சர் முதல் வேலையாக தனது நன்றி கடிதத்தை பிரதமருக்கு எழுதியிருக்க வேண்டும்.

ஏனென்றால் வேறு எந்த மாநிலத்திலும் கிடைக்காத அங்கீகாரம் தமிழ்நாட்டு செங்கோலுக்கு கிடைத்திருக்கிறது. எவ்வளவுதான் கொள்கை மாறுபாடு இருந்தாலும், கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழுக்கு என்று ஒரு பெருமை வரும்போது நீங்கள் அதை அங்கீகரித்திருக்கிறீர்கள் என்றால் உண்மையிலேயே நீங்கள் எல்லாம் தமிழ் பற்றார்கள். இல்லையென்றால் உங்கள் தமிழ் பற்றும் அரசியல் சார்ந்தது தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

See also  திருவண்ணாமலை:வீடுகளை மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது

நமது பாராளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாரதப் பிரதமர். அவர் தனது நோக்கத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார். இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி இருக்கிறார்கள், அவர்களுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதியே பாராளுமன்றத்தை பிரதமர் திறந்தால்தான் நன்றாக இருக்கும் என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.

ஓட்டு போடாதவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதா?

பிரதமர் திறக்க வேண்டும் என முடிவு எடுத்த பிறகு வெறும் அழைப்பு ஜனாதிபதிக்கு கொடுக்க மாட்டார்கள். ஜனாதிபதி வாழ்த்தோடு தான் அந்த கட்டிடம் திறக்கப்படுகிறது. இன்றைக்கு ஜனாதிபதி மீது அக்கறை கொண்டவர்கள், இதே ஜனாதிபதிக்கு வாக்களிக்காதவர்கள்தான். (திமுக கூட்டணி) நீங்கள் வாக்களிக்காமல் தான் அவர்கள் ஜனாதிபதி ஆகி இருக்கிறார்கள்.

ஒரு பழங்குடி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட உங்கள் மனதில் வரவில்லை. அந்த எண்ணம் கூட இல்லாதவர்கள் ஜனாதிபதிதான், பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து இருக்க வேண்டும் என்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள். பழங்குடி இனத்தவரை ஜனாதிபதி ஆக்க வேண்டும் என எண்ணாதவர்களுக்கு போராட்டம் நடத்துவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.

See also  நடிகை கவுதமி புகார்-அன்னசத்திர நிர்வாகி மீது வழக்கு

இவ்வாறு அவர் கூறினார்.


 Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!