திருவண்ணாமலையில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள கீழ்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது 44), மனைவி பெயர் பரிமளா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வெற்றிவேலின் வீட்டிற்கு அவரது சகோதரிகள் வருவது பரிமளாவிற்கு பிடிக்கவில்லையாம். இதனால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்தது.
இதன் காரணமாக பரிமளா கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு சென்னை பூந்தமல்லியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டார். பிறகு கடந்த 9ந் தேதி தனது கணவர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் 11ந் தேதி வெற்றிவேலை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பிறகு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி விசாரணை முடிந்து எழுத்து மூலமாக வெற்றிவேலின் விளக்கத்தை எழுதி வாங்கினாராம். அதன்பிறகு போலீஸ் நிலைய செலவிற்காக ரூ.3ஆயிரம் லஞ்சம் தர வேணடும் என கேட்டாராம்.
மனைவியுடன் ஏற்ட்ட சண்டையால் மனம் உடைந்திருந்த வெற்றிவேல், லஞ்சம் கொடுக்க விருப்பமின்றி இது பற்றி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார்.
டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிபபு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரியை பொறி வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வெற்றிவேலிடம் கொடுத்து அனுப்பினர்.

இன்று காலை மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பரமேஸ்வரியிடம், வெற்றிவேல் அந்த பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையுங்களவுமாக பிடித்து கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டப்பஞ்சாயத்து ஒழிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மகளிர் போலீஸ் நிலையங்களில் அதிக அளவில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இது சம்மந்தமாக ஏற்கனவே இருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மகளிர் போலீஸ் நிலையங்களில் தினமும் பெறப்படும் புகார்கள், அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகளை பெற்று கண்காணித்தனர்.
மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டுகளும் அடிக்கடி சென்று மகளிர் போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வந்தனர். காலப்போக்கில் அங்கு பணியில் இருக்கும் பெண் போலீசார் வைப்பது தான் சட்டம் என நிலைமை மாறியது. எனவே புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? எனவும், முறைகேடுகளை தவிர்க்கவும் உயரதிகாரிகள் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.