திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாய்-சேய் இறந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கடப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சங்கீதா(வயது 26). சங்கீதாவுக்கும், திருவண்ணாமலை அடுத்த கோணலூர் கிராமத்தைச் சேர்ந்த அருணாசலத்திற்கும் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
இந்நிலையில் சங்கீதா கர்ப்பம் ஆனார். தாய் வீட்டில் வசதி இல்லாத காரணத்தால் மாமியார் வீட்டிலேயே தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து இரவு 7-30 மணிக்கு அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குழந்தை பிறந்த தகவலை கேட்க ஆவலாக மருத்துவமனையில் காத்திருந்த சங்கீதாவின் கணவருக்கும், உறவினருக்கும் சங்கீதா இறந்து விட்டார் என்ற அதிர்ச்சி தகவலே கிடைத்தது. பிரசவத்தின் போது இறந்த சங்கீதாவின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த குழந்தையும் இறந்து விட்ட தகவல் கிடைக்கவே உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என கூறி அவர்கள் மருத்துவமனை முன்பு குழந்தையின் உடலை தரையில் கிடத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் கோட்டாட்சியர் மந்தாகினி, தாசில்தார் சரளா மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது சம்மந்தமாக விசாரணை நடத்தப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் சங்கீதாவின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.