Homeசெய்திகள்ரூ.2ஆயிரம் நோட்டை மக்கள் சேமித்து வைத்திருக்கிறார்கள்

ரூ.2ஆயிரம் நோட்டை மக்கள் சேமித்து வைத்திருக்கிறார்கள்

ரூ.2ஆயிரம் நோட்டை மக்களும், சிறு வணிகர்களும் சேமித்து வைத்திருப்பதாக கூறிய விக்கிரமராஜா டிசம்பர் 31ந் தேதி வரை காலஅவகாசம் தரவில்லை என்றால் கடைகளில் 2ஆயிரம் நோட்டை வாங்க மாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.ரவிச்சந்திரனும், செயலாளராக பி.பாஸ்கரனும், பொருளாளராக பி.ரங்கநாதனும், துணைத் தலைவராக சாந்தி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் எஸ்.விஜயகுமாரும், இணை செயலாளராக ஜெ.அருண்குமாரும், மக்கள் தொடர்பு அலுவலராக கே.கபிலனும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஜிஎஸ்டி வரி அதிகமாக கட்டக்கூடிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. வணிகர்களை வஞ்சிக்கும் வகையில் உள்ள ஜிஎஸ்டியில் சட்ட திருத்தம் தேவை. இதற்கு மாநில அரசு அதற்கு அழுத்தம் தர வேண்டும். ஜிஎஸ்டி சட்டம் எளிமைப் படுத்தப்பட வேண்டும். தொடர்ந்து வணிகர்களை கொடுமைப்படுத்துகிற வகையில் ஜிஎஸ்டி இருக்குமேயானால், அதை தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு மறுபரிசீலனை செய்யக்கூடிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

ரூ.2ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவித்து இதை மாற்றிக் கொள்வதற்கு குறுகிய கால அவகாசம் மட்டுமே தரப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு பத்து தாள்கள் அதாவது 20 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தலாம் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்தபோது மக்கள் தடுமாற்றத்தோடு காலை உணவுக்கு கூட வழியில்லாத நிலையில் இருந்ததை பார்த்து மனிதாபிமானத்தோடு வியாபாரிகள் அந்த பணத்தை வாங்கி வங்கியில் செலுத்தினார்கள். இதனால் அரசு வருவாய் துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பி பல வியாபாரிகளுக்கு பல லட்ச ரூபாய் அபராதத்தை விதித்தனர்.

எனவே இப்போது இதே போன்ற நிலை ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வணிகம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படும். 2000 ரூபாய் நோட்டை மாற்ற டிசம்பர் வரை 31 வரை கால நீடித்து தர வேண்டும். நிறைய வீடுகளில், சிறு கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை சிறுசேமிப்பாக வைத்திருக்கிறார்கள். இதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

எனவே இந்த பணத்தை எல்லாம் கட்ட வேண்டும் என்றால் கால நீடிப்பு செய்து தர வேண்டும். மத்திய நிதியமைச்சர் ரிசர்வ் வங்கியோடு தொடர்பு கொண்டு டிசம்பர் 31 வரை கால நீடிப்பு செய்து தர வேண்டும்.

2000 ரூபாய் நோட்டுகளை கடைகளில் பொதுமக்களிடமிருந்து வணிகர்கள் வாங்குவாரகள். சிறு கடைகளில் பத்து தாள்களுக்கு மேல் கொடுத்தால் கணக்கு கேட்கப்படும். நாங்கள் வாங்க மாட்டோம் என்று சொன்னால், வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் சொல்வார்கள். இதனால் சட்டம் ஒழங்கு பிரச்சனை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது.

அதனால் தான் கால நீட்டிப்பு வேண்டும். நீட்டிப்பு செய்தால் இந்த பிரச்சனைகள் ஏற்படாது. இல்லையென்று சொன்னால் 2000 நோட்டு பெறுவதை தமிழ்நாடு வணிகர் பேரவை மறுபரிசீலனை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!