திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு குறைவாக இருப்பது குறித்து கலெக்டர் தெரிவித்ததால் விரைந்து வந்த எஸ்.பி கார்த்திகேயன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அழுது புரண்ட மூதாட்டி
திங்கட்கிழமை தோறும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது. மனு மீது தீர்வு கிடைக்காததால் மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயலும் சம்பவங்கள் அதிகரித்ததால் இதை தடுக்க மனுதாரர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனாலும் தீக்குளிப்பு முயற்சிகளை தடுக்க முடியவில்லை.
இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்க போலீசாருக்கு தீ தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கலெக்டராக முருகேஷ் பதவியேற்ற பிறகு கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாயிலை தவிர அனைத்து வாயில்களையும் மூட உத்தரவிட்டார். இதன் காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றிக் கொள்ளும் சம்பவங்கள் குறைந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வருகை தந்த கலெக்டரின் கார் போர்டிகோவில் நுழையும் நேரத்தில் மூதாட்டி ஒருவர் திடீரென காரின் முன் படுத்து அழுது புரண்டார். இதனால் டிரைவர் காரை சிறிது தூரத்திலேயே நிறுத்தி விட்டார். காரிலிருந்து இறங்கிய கலெக்டர், மூதாட்டியை கைத்தாங்கலாக அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்து விசாரித்தார்.
அந்த மூதாட்டி பெயர் மலமஞ்சனூரைச் சேர்ந்த சீத்தா என்பதும், மாற்றப்பட்ட பட்டாவை தனது பெயருக்கு திருத்தம் செய்து கொடுக்க வேண்டி அவர் மனு கொடுத்திருப்பது தெரிய வந்தது. இது சம்மந்தமாக ஏற்கனவே உத்தரவு போடப்பட்டு விட்டது என அந்த மூதாட்டிக்கு கலெக்டர் விளக்கினார்.
தீக்குளிக்க முயற்சி
முன்னதாக கலெக்டர், தனது அலுவலகத்தில் பாதுகாப்பு குறைவாக இருப்பது குறித்து எஸ்.பியை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தாராம். இதையடுத்து 5 நிமிடத்தில் அதிரடிப்படையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் ஏன் போலீசார் குறைவாக இருக்கின்றனர் என கேட்டார். தேவனந்தல் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பிரச்சனையில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்றிருப்பது குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் சேராமல் இருக்க போலீசாரை அறிவுறுத்தி விட்டு அவர் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் கலசப்பாக்கம் வட்டம் சின்ன கல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி என்பவர் தன்னுடைய சொத்துக்களை வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பொய் கிரயம் பெற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த செயலை தடுத்து அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
15க்கும் மேற்பட்ட பதக்கங்களுடன் வந்த மாற்றுத் திறனாளி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் ஜடேரி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஜெகநாதன் என்பவர் தான் வாங்கிய 15க்கும் மேற்பட்ட பதக்கங்களை எடுத்துக் கொண்டு கலெக்டரை சந்தித்து மனு அளித்தார். சக்கர நாற்காலி கூடைப்பந்தில் இந்திய அணிக்காக விளையாடி வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை பெற்றிருப்பதாகவும், தனக்கு அரசு வேலை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.