ஆபத்து ஏற்பட்டு விடுமோ என பயப்படும் அதிகாரிகளால் கோப்புகள் தாமதப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார். எந்த ஆட்சியிலும் கொண்டு வராத திட்டங்களை திருவண்ணாமலைக்கு கொண்டு வருவேன் எனவும் அவர் உறுதி அளித்தார்.
புதிய ஊராட்சி அலுவலகம்
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தினை திறந்து வைத்து, திருவண்ணாமலை மாவட்ட ஒன்றியக்குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 11 புதிய கார்களின் சாவிகளையும், 6779 பயனாளிகளுக்கு ரூ.15 கோடியே 86 லட்சத்து 12 ஆயிரத்து 887 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலெக்டர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மு,பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநில தடகள சங்கத் துணை தலைவர் மரு. எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பார்வதி சீனிவாசன், எ.வ.வே. கம்பன், இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் எ.வ.வேலு பேசியதாவது,
அதிகாரிகள் பாராட்டினால் பெருமை
சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரச்சனைகளும் சுருக்கமாக பேசிவிட்டு சென்ற நிலையில் எனக்கு முன்பு பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் பேருரை ஆற்றியிருக்கிறார். இந்த ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை அவர் பட்டியலிட்டார். இடையில் கூட மு.பெ.கிரி என்னை பார்த்து மாவட்ட ஆட்சித் தலைவர் நீண்ட நேரம் பேசுகிறாரே அவரை நிறுத்த சொல்லட்டுமா? என சைகை காட்டினார். நான் வேண்டாம் என தலையாட்டினேன்.
மாவட்ட ஆட்சித் தலைவர் பேசிய நேரத்தை விட நாங்கள் கூடுதலாக பேசினாலும் இந்த ஆட்சிக்கு பெருமை இல்லை. எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் அதிகாரிகள் தான். அதிகாரிகள் பாராட்டி பேசினால் தான் ஆட்சிக்கும், எங்களுக்கெல்லாம் பெருமை.
சந்தேக அதிகாரிகளால் கோப்புகள் தாமதம்
எப்போதுமே அதிகாரிகள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு தான் முயற்சிகளை செய்வார்கள், சிக்கலில் மாட்டிக் கொள்ள முயற்சிக்க மாட்டார்கள். தங்களை பாதுகாத்துக் கொள்வதில் தான் முனைப்பாக இருப்பார்கள். மக்களுக்கு திட்டங்களை தீட்டுவதில் இப்படி செய்தால் ஆபத்து வந்துவிடுமோ? சட்டப்படி தான் செய்து கொண்டிருக்கிறோமா? விதிகளுக்கு உட்பட்டு செய்து கொண்டிருக்கிறோமா? என சில அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படுகின்ற காரணத்தால் கோப்புகளில் தாமதம் இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் நெகட்டிவ் அதிகாரிகள் என்ன சொல்வார்கள்.
நமது மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட சில அதிகாரிகள் எந்த காரியமானாலும் முன்னோக்கி சிந்திப்பார்கள். தலைமைச் செயலாளர் இறையன்புவும் இப்படித்தான். பொதுமக்கள் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் நேரடியாக சந்தித்து மனு தருகிறார்கள். அதற்கு தீர்வு காண்கிற இடத்தில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளோடு, அதிகாரிகளும் இணைந்து பணியாற்றினால் தான் திட்டங்கள் மக்களைச் சென்றடையும். இதனால் தான் ஒரு பாசிட்டிவ் எண்ணம் கொண்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவரை இந்த மாவட்டம் பெற்றிருக்கிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஐஏஎஸ் அதிகாரிகளிடையே நான்காவது தளத்தில் இருப்பவர், நமது மாவட்ட ஆட்சித் தலைவர். என்னுடைய புரட்டகால் பிரகாரம் நான் முதலமைச்சருக்கு ஐந்தாவது இடத்தில் அமர்ந்திருப்பவன். மாவட்ட ஆட்சித் தலைவரை புகழ்ந்து பேசுவதால் பெருமைப்படக்கூடிய அவசியம் எனக்கு இல்லை. தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகளோடு இணைந்து செயல்பட்டால் மாவட்டம் சிறப்படையும்.
கையில் காசு வாயில் தோசை
அமைச்சர் மஸ்தான் பேசுவதற்கு முன் எனக்கு ஓர் ஐயம் ஏற்பட்டது. இந்த மாவட்டத்தின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவாரோ? மாவட்டத்தில் இத்தனை திட்டங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறாரே என நம் மீது கோபப்படுவாரோ? என ஐயம் உண்டானது. ஆனால் மஸ்தான் பேசுகையில் இந்த மாவட்டத்தை போல் விழுப்புரம் மாவட்டத்தையும் ஆக்குவதற்கு என்னோடு சேர்ந்து உதவியாக இருக்க வேண்டுமென பாசிட்டிவாக சொல்லி இருக்கிறார். நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த மாவட்டத்தில் என்னென்ன பணிகள் நடக்கிறதோ அத்தனை பணிகளையும் விழுப்புரம் மாவட்டத்திற்கும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். இதேபோல் மற்ற அமைச்சர்களிடம் பேசி அவருக்கு தேவையான திட்டங்களை பெற்று தர உதவியாக இருப்பேன்.
கையில் காசு, வாயில் தோசை என்ற பழமொழி உண்டு. அத்தியந்தல் மற்றும் கிரிவலப் பாதையில் இலங்கை தமிழர்கள் குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று செஞ்சி மஸ்தானிடம் கூறினேன். அவர்களுக்கு ஒரே குடியிருப்பாக கட்டி தரும்படி கேட்டேன். இடத்தை நான் காட்டுகிறேன், இந்த ஆண்டு அவர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என சொன்னேன். இன்று இடம் பார்க்க வந்துவிட்டார். இந்த ஆட்சி எவ்வளவு விரைந்து செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
கோயில் இல்லை என்றால் வேலை இல்லை
நேற்று சொன்னேன், இன்று நடக்கிறது. நேற்று காசு கொடுத்தேன், இன்றைக்கு வாயில் தோசை வந்துள்ளது. திருவண்ணாமலை ஆன்மீக ஊர். அண்ணாமலையார் திருக்கோயில் இல்லை என்று சொன்னால் பாதி பேருக்கு வேலை இல்லை. பணி கிடைத்திருக்கிறது, வருமானம் கிடைத்திருக்கிறது, தொழில் செய்கிறோம் அதற்கு காரணமாக இருப்பது அண்ணாமலையார் கோயில்.
இப்படித்தான் தமிழ்நாட்டில் பல ஆன்மீக கோயில் உள்ளது. தமிழ்நாட்டில் அதிகம் உள்ள ஆன்மீகப் பெருமக்களுக்கு தேவையான திட்டங்களை அளவிற்கு இந்த ஆட்சியைப் போல் எந்த ஆட்சியிலும் செய்யவில்லை என்ற அளவிற்கு இந்து சமய அறநிலை துறை மூலம் திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நீ ஆன்மீகவாதியில்லையே என கேள்வி
அந்த முறையில் தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தம்பி சேகர் பாபு ஒரு முறைக்கு மூன்று முறை பயணம் செய்தார். ஆன்மீக பெருமக்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பல கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது.
ஒருவர் என்னை பார்த்து கேட்டார், நீ ஆன்மீகவாதியில்லையே, பகுத்தறிவாளன் தானே என்று. நான் அவரிடம் சொன்னேன், இந்த தமிழ்நாட்டில் திராவிடத்தையும், பகுத்தறிவையும், ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று. திராவிடமும் ஆன்மீகமும் நிறைந்தது தான் திராவிட மாடல் ஆட்சி. எனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலைக்கு எந்த காலத்திலும் நடக்காத திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எ.வ.வேலு பேசினார்.