Homeசெய்திகள்என் உருவத்தை பற்றிய கிண்டல் உயர்வை தந்தது- தமிழிசை

என் உருவத்தை பற்றிய கிண்டல் உயர்வை தந்தது- தமிழிசை

இணைய தளத்தை திறந்தால் என்னை குட்டை, பரட்டை, கருப்பு என கேலி செய்திருப்பார்கள். இது என்னை காயப்படுத்தாமல் உயர்வை தந்தது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீவிஜய் பாலாஜி மகாலில் திருவண்ணாமலை அருணை இன்போ சர்வீஸ் சார்பில் படித்த இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரையும் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.விஜயன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,

அண்ணாமலையார் உறுதுணையாக இருந்தார்

இன்னும் 25 நாட்களில் யோகா தினம் வர உள்ளது இதற்காக ஐதராபாத்தில் ஒரு பிரமாண்டமான மைதானத்தில் கவுண்டன் நிகழ்ச்சி இன்று (நேற்று) காலை 6-30 மணிக்கு நடைபெற்றது இதில் ஆளுநர் என்ற முறையில் கலந்து கொண்டு மறுபடியும் விமான மூலம் புதுவை வந்து புதுவையில் ஒரு மருத்துவக் கல்லூரியில் பிரச்சனை குறித்து அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி விட்டு மீண்டும் சாலை வழியாக திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறேன்.

காலை ஒரு மாநிலம், மதியம் ஒரு மாநிலம், மாலை ஒரு மாநிலம் என மூன்று மாநிலங்களை ஒரே நாட்களில் வந்து சேர்ந்திருக்கிறேன். இதற்கு அண்ணாமலையார் தான் உறுதுணையாக இருக்கிறார். திருவண்ணாமலைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதனால் கட்டாயம் வரவேண்டும் என நினைத்தேன். இன்று திருவண்ணாமலைக்கு பல ஆண்டுகள் கழித்து வருகிறேன்.

See also  லியோ படம்- விதி மீறினால் கடும் நடவடிக்கை

64 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு

நான் சார்ந்த இயக்கத்தில்(பாஜக) தலைவராக ஆவதற்கு முன்னால் சில மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக இருந்தேன். அதில் திருவண்ணாமலையும் ஒன்று. மாணவர்கள் நிகழ்ச்சி என்றால் எனக்கு எப்போதும் பிடிக்கும். ஏனென்றால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என இப்போதுள்ள மாணவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 64 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள் அதில் ஒருவராக நாம் காத்திருக்க போகிறோமா? என்பது தான் கேள்வி.

மகன் தனது அப்பாவிடம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எனது அட்டையை புதுப்பித்து விட்டு வருகிறேன் என சொன்னதற்கு அப்பா சொல்கிறார் எனது அட்டையும் தருகிறேன் அதையும் புதுப்பித்து வா என்று. காலங்காலமாக வேலைக்காக காத்திருக்கிறார்கள். அப்படி காத்திருக்காமல் நானே பல பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்பதற்கு அடித்தலமாக அமைவது தான் இந்த நிகழ்ச்சி. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும் வாய்ப்புகள் அதிகமாக காத்திருக்கிறது. இறை உணர்வு நமக்கு தன்னம்பிக்கையை தரும்.

ஆன்மீகம் வழிகாட்டுகிறது

கணிதமேதை ராமானுஜருக்கு கணிதமே படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நாமக்கல்லில் எங்களது குலதெய்வமாக இருக்கிற அன்னை மகாலட்சுமி எனக்கு வழிகாட்டுகிறார், நரசிம்மர் எனக்கு வழிகாட்டுகிறார் என ராமானுஜர் சொன்னதாக  அப்துல் கலாம் கூறுகிறார். இது எதை காட்டுகிறது என்று சொன்னால் நம் அறிவோடு, நமது ஆற்றலோடு ஆன்மீகத்தையும் இணைக்கிற போது நமக்கு அது வழிகாட்டுகிறது.

நமது திறமையை நாம் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். எம்எல்ஏவிடம் போய் ஒருத்தர் வேலை கேட்டார். அந்த அந்த எம்எல்ஏ சொன்னார், எனக்கு வேலை கிடைக்காததால் தான் நானே எம்எல்ஏ ஆனேன் என்று. என்னை போன்றவர்கள் எல்லாம் அப்படி இல்லை.

See also  ரூ.4 ஆயிரம் தந்ததை மறந்து விட்டிருப்பார்கள்-அமைச்சர்

என் உருவத்தை பற்றிய கிண்டல் உயர்வை தந்தது- தமிழசை

தாமரை போல் வாழ்க்கை

பட்டை தீட்டும் போதெல்லாம் உனக்கு கோபம் வந்தால் எப்படி நீ வைரமாக மின்ன முடியும்?. எவ்வளவோ பிரச்சனைகள் வரும். அந்தப் பிரச்சினைகளை எல்லாம் நம்மை பட்டை தீட்டுவதற்கு தான் அடிபடுகிறோம் என நினைத்தால் நீங்கள் வைரமாக மின்னலாம்.

தாமரை மாதிரி வாழ்க்கையை வாழ வேண்டும் என ஞானி சொன்னதாக அப்துல்கலாம் சொல்கிறார். தாமரை மலர் நீரில்தான் தான் பிறக்கிறது, நீரில் தான் வளர்கிறது, நீரையும் தாண்டி வளர்கிறது. நீரால் அது காயப்படுவதில்லை, மண்ணாலும் அது அழுக்கு படுவதில்லை. ஆனால் தாமரை மலர்ந்தபடியே இருக்கிறது. அதே போல்தான் வாழ்க்கையும்.

பேச்சுப் போட்டிக்கு செல்லும்போது நான் ஓரளவு சுமாராக பேசுவேன். டாக்டருக்கு தான படித்திருக்கிறீர்கள். தமிழ் நன்றாக பேசுகிறீர்களே? என்று என்னை கேட்பார்கள். தமிழ் கற்றதனால் நன்றாக பேசுகிறீர்களா? என கேட்பார்கள். இல்லை தமிழ் என்னை பெற்றதனால் தமிழ் பேசுகிறேன் என்று சொல்வேன். ஓரளவுக்கு நான் நன்றாக பேசியவுடன் எனக்கு முதல் பரிசு என எழுதுவார்கள். அப்போது டீச்சர் எனது அப்பா பெயரை சொல்லி அவர் மகள்தான் முதல் பரிசு வாங்க போகிறார் என்று சொல்லுவார். உடனே நடுவர்கள் குமரி ஆனந்தனுடைய பெண்ணாக இருப்பதால் இன்னும் நன்றாக பேசி இருக்கலாம் என்று எனக்கு பரிசு கொடுக்க மாட்டார்கள்.

See also  விவசாயிகளிடம் 5081 நெல் மூட்டைகளை வாங்கி மோசடி

அரசியல்வாதி மகளாக இருந்ததால் பல வாய்ப்புகளை நான் இழந்திருக்கிறேன். அரசியல் வாழ்க்கையில் பல சிரமங்களை பட்டேன். எந்த அளவிற்கு பரிகாசத்தையும், சிரமங்களையும் பட்ட ஒரு பெண் அரசியல்வாதி தமிழகத்தில் இருக்க முடியாது. ஆனால் இதையெல்லாம் தாங்கியதால் தான் இரண்டு மாநிலத்துக்கு ஆளுநராக உள்ளேன்.

கிண்டல் செய்தது காயப்படுத்தவில்லை

எதையாவது சொல்லணும், எப்படியாவது கிண்டல் செய்யணும் என இணையதளத்தை திறந்தால் தமிழிசை நன்றாக பேசுவார்கள் என்று சொல்ல மாட்டார்கள், அந்த அம்மா குட்டையாக இருக்கிறார்கள், பரட்டையாக இருக்கிறார்கள், கருப்பாக இருக்கிறார்கள் என்று இருக்கும். நல்ல மனசுக்காரர், நல்ல திறமையா கட்சி நடத்துகிறார் என்று சொல்ல மாட்டார்கள். என்ன வேண்டுமானாலும் சொல், நீ சொல்ல சொல்ல அது என்னை காயப்படுத்த வில்லை, எனக்கு உயர்வை தான் தந்தது.

வாழ்க்கையில் நமக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும், அந்த நோக்கத்தை நோக்கியே நாம் செல்ல வேண்டும். இந்தப் பாதையில் கற்கள், முட்கள் இருக்கலாம். பாதை கரடு, முரடாக இருக்கலாம். அதை பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக திருவள்ளுவர் பல்கலைக் கழக துணைவேந்தர் டி.ஆறுமுகம் உள்பட பலர் பேசினார்கள்.

முடிவில் அருணை இன்போ முதன்மை அலுவலர் ஆர்.ஜீவானந்தம் நன்றி கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!