தேவனந்தல் புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கை அமைக்க விடமாட்டோம் என பாஜக மாவட்டத் தலைவர் கே.ஆர். பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
வேங்கிக்கால், அடிஅண்ணாமலை ஆடையூர் போன்ற கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக திருவண்ணாமலையிலிருந்து காஞ்சி செல்லும் சாலையில் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு என்ற பகுதியில் மலையை ஒட்டிய 5 ஏக்கர் இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்ட குப்பைகள் போலீஸ் பாதுகாப்புடன் கொட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போது அந்த கிடங்கை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த குப்பை கிடங்கால் விவசாயம் பாதிக்கப்படும், நிலத்தடி நீர் மாசுபடும், குப்பைகளில் உருவாக்கும் மற்றும் கொசுவால் வியாதிகள் ஏற்படும், யாராவது தீவைத்துவிட்டால் சுற்றுச்சூழல் சீர்கேடு, மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் எனவே அப்பகுதியிலிருந்து குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டு, பாமக, பாஜக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குப்பை கிடங்கு அமைக்கும் இடத்திற்கு சென்ற பாஜகவினர் குப்பை கிடங்கை அமைக்க விட மாட்டோம் என கிராம மக்களிடம் உறுதி அளித்தனர்.
அப்போது கிராம மக்களிடையே பாஜக மாவட்டத் தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியம் பேசியதாவது,
மழை நேரத்தில் மலையிலிருந்து வரும் தண்ணீர் குப்பை கிடங்கில் ஊறி விவசாய நிலங்களில் செல்லும். இதனால் விவசாயம் பாதிக்கும், குடிக்கிற தண்ணீரும் கெடும். ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாது. இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டும் என்பது அரசாங்கத்தின் விதியாக இருக்கும் நிலையில் இங்கு இயற்கை வளத்தை அழித்து இப்பகுதியில் விவசாயிகள் நட்டு வைத்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி எறிந்து விட்டு குப்பை கிடங்கை அமைத்து வருகின்றனர்.
பாலிப்பட்டு, புனல்காடு பகுதி மக்கள் திமுகவிற்கு ஓட்டு போட்டிருக்கின்றனர். ஆனால் ஓட்டு போட்டவர்களின் நலன்களை பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இனிமேலாவது இந்த நிலை வராமல் இருக்க 500, 1000த்துக்கு ஓட்டு போடாமல் நீங்கள் எல்லாம் திருந்த வேண்டும். மக்களுக்கு நல்லது செய்கிற கட்சி எது என்பதை பார்த்து ஓட்டு போட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.
குப்பைகளை எடுத்து வருவதற்கான வாகன டெண்டரை திமுகவினர்தான் எடுத்திருப்பார்கள். பணம் சம்பாதிப்பது மட்டும்தான் அவர்களுடைய குறிக்கோள். பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிற வகையிலும், விவசாய நிலங்கள் பாதிக்கிற வகையிலும், குடிநீர் பாதிக்கிற வகையிலும் குப்பை கிடங்கை அமைக்க முயற்சிக்கின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இந்த குப்பை கிடங்கு இங்கு அமைக்க விடாமல் தடுப்போம் என உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன் மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் சந்தோஷ், நகரத் தலைவர் மூவேந்தன், எஸ்.ஆர்.எஸ்.செல்வம் மற்றும் பலர் சென்றிருந்தனர்.