திருவண்ணாமலைக்கு 2004ம் ஆண்டு வந்த நடிகர் அஜீத் கிரிவலம் வந்து அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்தது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தது போன்றவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடிகர் விஜய், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்களுக்கு ஊக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஏறக்குறைய 13 மணி நேரம் நின்று அவர் இதை வழங்கினார். நீண்ட நேரம் நின்றதால் அவர் நாற்காலியில் சாய்ந்து நின்ற புகைப்படங்கள் வெளி வந்தன.
இதே போல் 2004ம் ஆண்டு தான் நடித்த ‘ஜி’ படம் வெளியாவதற்கு முன்பு நடிகர் அஜீத்தும் திருவண்ணாமலையில் நீண்ட நேரம் நின்று ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2004 பிப்ரவரி மாதம் திருவண்ணாமலைக்கு வந்த நடிகர் அஜீத், நள்ளிரவு 1 மணி அளவில் நடந்தே கிரிவலம் சென்றார். கிரிவலம் முடிந்து அதிகாலை 5 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் கோபூஜை நடத்தி சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோயில் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.
சில நிமிடங்கள் திரிசூல் ஒட்டலில் தங்கிய அஜீத், அதன் பிறகு காலை 6 மணிக்கு என்.எஸ். சித்ரமஹால் திருமண மண்டபத்திற்கு சென்று ரசிகர்களை சந்தித்தார். மாலை 6 மணி வரை அவர் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மதிய உணவுக்கு சிறிது நேரம் இடைவெளி விடப்பட்டு மீண்டும் ரசிகர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் அஜீத் இயற்கை கழிவுகள், செயற்கை கழிவுகள் கொண்ட குப்பைகளை பிரித்து அதற்குண்டான தொட்டியில் போடும்படி வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும் இயற்கை கழிவுகள் என எழுதப்பட்டிருந்த பச்சை நிற தொட்டியையும், செயற்கை கழிவுகள் என எழுதப்பட்ட சிவப்பு நிற தொட்டியையும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கினார். மேலும் பசுமையை வளர்ப்போம், இயற்கை வளத்தை காப்போம் என்ற நோட்டீசையும் நடிகர் அஜீத் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தற்போது இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.