Homeசெய்திகள்அண்ணாமலையாருக்கு ஜாதி இல்லாத போது கிராம கோயிலுக்கு உண்டா?

அண்ணாமலையாருக்கு ஜாதி இல்லாத போது கிராம கோயிலுக்கு உண்டா?

அண்ணாமலையார் கோயிலுக்கு இல்லாத ஜாதி கிராமத்தில் உள்ள கோயிலுக்கு எப்படி வந்து விடும்? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் எ.வ.வேலு, மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று பேசிக் கொண்டிருந்தால் அந்தப் பதவிக்கு அறங்காவலர்கள் பொருத்தமானவர்கள் அல்ல கண்டிப்புடன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 452 திருக்கோயில்களுக்கு 748 பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கான ஆணை வழங்கும் விழா, திருவண்ணாமலை காந்தி நகர் நகராட்சி மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.

சி.என்.அண்ணாதுரை எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி எஸ்.அம்பேத்குமார் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சீ.பார்வதிசீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் கே.வி.சேகரன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது,

788 கோயிலுக்கு குடமுழுக்கு

தமிழகத்தில் இரண்டு ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் 788 திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெண்களும் ஓதுவராக இருக்க வேண்டும் என்று சொன்னது தான் இந்த திராவிட மாடல் ஆட்சி. கிராம கோயில் திருப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தியது தான் திராவிட மாடல் ஆட்சி. ஆண்டுக்கு 1250 கோயில்களுக்கு திருப்பணி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 13,550 கோயில்களுக்கு ஒரு கால பூஜைக்கு மானிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்கு சிறப்பாக திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீகப் பெருமக்கள் எல்லாம் திராவிட மாடல் ஆட்சியையும், முதல்வரையும், அமைச்சர் சேகர்பாபுவையும் பாராட்டி வருகிறார்கள்.

ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள்

தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் தான் முதன் முதலாக மாவட்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது.

திராவிட மாடல் ஆட்சியில் இருக்கிற நாங்கள் எல்லாம் ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள். சில இயக்கங்கள் கோயிலுக்கு ஆதிதிராவிடர்களை நியமிக்க வேண்டும், பெண்கள் நியமிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறோம் என சொல்வதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லியிருக்கலாம்.

ஆதிதிராவிடர்களை திருக்கோயிலுக்கு நியமிக்க வேண்டும் என்று ஆணையிட்டவர் கருணாநிதிதான். தாய் எட்டு அடி என்றால் குட்டி பதினாறு அடி என்பது போல் அவரேயே மிஞ்சும் அளவுக்கு இன்றைக்கு தலித் மக்கள் மீது ஆதிதிராவிட மக்கள் மீது பெண்கள் மீது அதிக அக்கறை உள்ள ஆட்சியாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

அண்ணாமலையாருக்கு ஜாதி இல்லாத போது கிராம கோயிலுக்கு உண்டா?

நான் பெரும்பாலும் இந்த மாதிரியான இந்து சமய அறநிலைத்துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.ஆனாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கடமை இருக்கிறது. மற்ற மாவட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில் நமது மாவட்டத்திற்கு இந்து சமய அறநிலைத்துறைக்கு அள்ளி கொடுத்திருக்கிற முதலமைச்சருக்கும், அமைச்சர் சேகர் பாபுவுக்கும் திருவண்ணாமலை மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அறநிலை துறை அனுமதியோடு, மாவட்ட ஆட்சித் தலைவர் உதவியோடு தூய்மை அருணையில் உள்ள 1000 பேரின் பங்குத் தொகையுடன் இன்றைக்கு திருவண்ணாமலை அய்யங்குளம் தூர்வாரப்படுகிறது.

அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அங்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்ய வேண்டும். அறங்காவலர் நியமிக்கப்படாத கோயிலுக்கு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். இதை மூன்று மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும்.

கடவுளுக்கு ஜாதி உண்டா?

அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்கள், பொது நோக்கத்தோடும், சமூக நல்லிணக்கத்தோடும் செயல்பட வேண்டும். சமூக நல்லிணக்கம் என்றால் என்ன? கடவுளுக்கு ஜாதி உண்டா? அண்ணாமலையார் கோயிலுக்கு ஜாதி உண்டா? அண்ணாமலையார் கோயிலுக்கு யார் போகவில்லை? அனைவரும் போகின்றனர். அண்ணாமலையார் கோயிலுக்கு இல்லாத ஜாதி கிராமத்தில் உள்ள கோயிலுக்கு எப்படி வந்துவிடும்?

எனவே திருக்கோயிலுக்கு உள்ள கடவுளுக்கு ஜாதி என்பது இல்லை. கடவுளுக்கு ஜாதி இல்லை என்ற போது கடவுளை வணங்கும் போது எங்கு ஜாதி வருகிறது? நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் நல்லிணக்கத்தோடு பணியாற்ற வேண்டும். அறங்காவலராக உட்கார்ந்து கொண்டு நீ மேல் ஜாதி நான் கீழ் ஜாதி என்று பேசிக் கொண்டிருந்தால் அந்தப் பதவிக்கு நீங்கள் பொருத்தமானவர்கள் அல்ல.

கடவுளுக்கு எப்படி ஜாதி இல்லையோ அதை போல் அந்த திருத்தொண்டை செய்யப் போகிற ஆன்மீக பெருமக்களாகிய நீங்கள் அனைத்து ஜாதியையும் சமமாக மதிக்க வேண்டும். அதைத்தான் இந்த ஆட்சி பாராட்டும். அதேபோல் அறங்காவலர்கள் கோயில் சொத்துக்களை கணக்கெடுத்து வருவாயை அதிகப்படுத்த வேண்டும். கோயில் சொத்தை பாதுகாக்க வேண்டும். குத்தகை, வாடகைதாரர்களிடம் உள்ள பாக்கிகளை உடனே வசூலிக்க வேண்டும்.

சில மேட்டுக்குடி மனப்பான்மை உள்ளவர்கள் கடவுளுக்கு ஜாதி உள்ளது என நினைப்பார்கள். அப்படிப்பட்ட இடங்களில் பிரச்சனை ஏற்படும் எனில் அதெற்கெல்லாம் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் தான் பொறுப்பு என நினைக்காமல் அறங்காவலர்கள் முதலில் சென்று குரல் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஒற்றுமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அர.சுதர்சன், துணை ஆணையர் த.சிவலிங்கம், எ.வ.வே.கம்பன், இரா.ஸ்ரீதரன், எம்.எஸ்.தரணிவேந்தன், அறங்காவலர் நியமன குழு உறுப்பினர்கள் என்.பாண்டுரங்கன், அ.சிவக்குமார் அ.ஜெயபாரதி மணி, ம.வெங்கடேசன், நகரமன்ற தலைவர் நிர்மலாகார்த்திவேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!