திருவண்ணாமலை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.25 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு முதல் இதுநாள் வரை திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் மீது திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த போன்களை கண்டு பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இதன் காரணமாக தொலைந்து போன 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் விலை உயர்ந்த போன்களும் அடங்கும். கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். தங்களுடைய செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது என்று போலீசார் கூறிய தகவலால் 2022ம் ஆண்டு போனை தொலைத்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்திகேயன் 100 செல்போன்களையும் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
அப்போது சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆ.பழனி, ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
வாட்ஸ்அப்பில் சிலர் டெலகிராம் குரூப்புகளில் இணையுமாறும், அதில் பணத்தை முதலீடு செய்தால் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைக் கூறி மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அதனை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், பிங்க் வாட்ஸ்அப் (Pink WhatsApp)என்ற செய்தி, WhatsAppன் புதிய official செயலி என்று எஸ்.எம்.எஸ். மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப்-ல் செய்திகள் வந்தாலோ அதில் அதிலிருக்கும் லிங்க்கை தொட்டால் போன் Hack செய்யப்பட்டு தகவல்கள் திருடப்படும்.
ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் போன்று போலியான நபர்கள் தங்களின் விலை உயர்ந்த வாகனங்களை (2 மற்றும் 4 சக்கர வாகனங்கள்) மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம்.
செல்போன் எண்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். தெரியாத எண்ணிலிருந்து வரும் லிங்க்குகளை தொட்டால் பணம் பறிபோய் விடும். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் நட்புக்கான அழைப்புகள் ஆபத்தானது, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களின் போட்டோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது.
எந்த ஒரு ஆன்லைன் வேலைக்கும் பணம் செலுத்த வேண்டாம். எந்த ஒரு கடன் செயலியிலும் கடன் வாங்க வேண்டாம். ஆன்லைன் விளையாட்டுகளை பிள்ளைகள் விளையாட அனுமதிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை ஏடிஎம், ஜிமெயில், பேஸ்புக், நெட்பேக்கிங் பாஸ்வேர்டை மாற்றவும்.
பணம் பரிவர்த்தனை தொடர்பான குற்றங்கள் நடந்து 24 மணி நேரத்தில் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். http://cybercrime.gov.in/ என்ற இணையதளத்திலும் புகாரை பதிவு செய்யலாம்.
இந்த விவரங்கள் பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் விளக்கப்பட்டன. மேலும் கல்வி நிலையங்களிலும் இதுபற்றி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது.